மத்திய காஸாவில் பெய்த கடும் மழையினால் மணல் மேடு சரிந்து வீழ்ந்ததில் நான்கு சிறுவர்கள் உட்பட குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெய்ர் அல்-பலாஹ் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது மணல் மேடு சரிந்து வீழ்ந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த சிலர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்புப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காஸா முழுவதும் பெய்த கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த பலஸ்தீனர்களின் கூடாரங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஸா நகரிலிருந்து நேற்று செய்தி வெளியிட்ட அல் ஜஸீரா செய்தியாளர் இப்ராஹிம் அல்-கலீலி, இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசிக்கும் தற்காலிக கூடாரங்கள் கடுமையான காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
“சமீபத்திய புயல், இந்த மக்களின் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமானது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. சில மணிநேரங்களுக்குள் பலத்த மழையும் காற்றும், தமது கூடாரங்களை வலுப்படுத்துவதற்காகப் பல நாட்களாக முயற்சித்த குடும்பங்களின் தங்குமிடங்களைச் சிதைத்தன” என அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தினால் மெத்தைகள், தலையணைகள் மற்றும் ஆடைகள் நீரில் நனைந்து சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுமார் 400,000 இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அதிக அபாயம் கொண்ட பகுதிகளில் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவ் த சில்ட்ரன் சர்வதேச அமைப்பின் மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவுக்கான பிராந்திய பணிப்பாளர் அஹ்மத் அல்-ஹிந்தாவி, இந்த நிலைமை “இதயத்தை நொறுக்கும் வகையிலும் முற்றிலும் எதிர்பார்க்கக்கூடியதாகவும்” உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“வார இறுதியில் குடும்பங்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களின் கூடாரங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து முழு முகாம்களையும் மூழ்கடித்ததாக காஸாவில் உள்ள எமது பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். குளிர்கால ஆடைகள் இன்றி சிறுவர்கள் கடும் குளிரில் நடுங்கினர். குடும்பங்கள் தமக்குச் சொந்தமாக எஞ்சியிருந்த சில உடைமைகளையும் இழந்தன” என அவர் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“இது வெறுமனே மோசமான காலநிலையின் விளைவு அல்ல. கூடாரங்கள், தங்குமிடப் பொதிகள் மற்றும் எரிபொருள் ஆகியவை காஸாவின் எல்லைகளில் காத்திருக்கின்றன. ஆனால் இஸ்ரேலிய அதிகாரிகள் அவற்றை உள்ளே அனுமதிக்காததால் சிறுவர்கள் வெள்ளநீரில் உறங்குகின்றனர். இது திட்டமிட்ட தெரிவாகும். இதன் விலையைச் சிறுவர்களே செலுத்துகின்றனர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் காஸாவில் பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 70,000 கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், டஜன் கணக்கான சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் நிவாரணப் பொருட்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், இந்த வெள்ளப்பெருக்கு அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது.
மத்திய காஸாவின் டெய்ர் அல்-பலாஹ் பகுதியிலிருந்து செய்தி வெளியிட்ட அல் ஜஸீரா செய்தியாளர் அஷ்ரப் அபு அம்ரா, வெள்ளத்தினால் தமது தங்குமிடங்கள் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சனிக்கிழமை அதிகாலை முதல் உணவு நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்திற்கான ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) விசேட பிரதிநிதி ஜொனதன் வீட்ச், பெரும்பாலான மக்கள் “மோசமான நிலைமைகளில்” வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டதுடன், அத்தியாவசிய நிவாரண உதவிகளை வழங்குவதற்கு மேலதிக நிதி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
புயலினால் ஏற்பட்ட சேதங்கள் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதாக காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும், நிவாரண அமைப்புகள் பல ஆண்டுகளாக உதவிப் பொருட்களையும் ஆதரவையும் காஸாவிற்குள் கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.
காஸா சிவில் பாதுகாப்புப் பிரிவுக்கு குறைந்தது 1,500 அவசர அழைப்புகள் கிடைத்துள்ளதாகவும், 2,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து வீழும் அபாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காலநிலை பாதிப்புகளுக்கு உள்ளான இடம்பெயர்ந்த மக்களுக்கு முறையான தங்குமிடங்களை வழங்குவதற்கு குறைந்தது 300,000 கூடாரங்கள் தேவைப்படுவதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் காஸாவின் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளைப் பெருமளவில் அழித்துள்ளது.
தொடர்ந்து விதிக்கப்படும் நிவாரணப் பொருட்கள், தங்குமிட உபகரணங்கள் மற்றும் புனரமைப்புப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் நிவாரணப் பணிகளை மேலும் தாமதப்படுத்தியுள்ளன.
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பமான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரில் இதுவரை 74,640-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
2025 ஒக்டோபரில் “போர் நிறுத்தம்” அமுலுக்கு வந்ததன் பின்னரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 1,610 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









