மகாவலி ஆற்றின் குறுக்கே சரசவி உயன மற்றும் பேராதனைக்கு இடையில் புதிய ரயில் பாலமொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தப் பாலம் மாத்தளை ரயில் பாதையில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், கண்டி பெருநகரப் பிராந்தியத்தை உள்ளடக்கிய விரிவான புறநகர் ரயில் வலையமைப்பை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்படவுள்ளது.
டித்வா (Ditwah) சூறாவளியினால் சேதமடைந்த ரயில்வே உட்கட்டமைப்புகளைப் புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவினால் வழங்கப்படும் கடன் திட்டத்தின் (Indian Line of Credit) ஊடாக இத்திட்டத்திற்கான நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்தப் புதிய பாலத்தின் மூலம் மாத்தளை ரயில் பாதையை தேசிய ரயில் வலையமைப்புடன் மேலும் சிறப்பாக இணைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கண்டி பெருநகரப் பிராந்தியத்தில் விரிவான புறநகர் ரயில் வலையமைப்பொன்றை உருவாக்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் கீழ், பேராதனை ஊடாக கடுகண்ணாவையிலிருந்து கம்பளை வரையான பிரதான ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், பேராதனையிலிருந்து கட்டுகஸ்தோட்டை வரையான மாத்தளை ரயில் பாதையையும் இரட்டை ரயில் பாதையாக மாற்றுவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
தற்போதுள்ள ஒற்றை ரயில் பாதை கட்டமைப்பினால் ஏற்படும் போக்குவரத்துத் திறன் கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதுடன், ரயில் சேவைகளின் நம்பகத்தன்மை மற்றும் இணைப்புத்தன்மையை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
புதிய ரயில் பாலத்தை நிர்மாணிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.







