அரசாங்கத்தின் ‘Clean Sri Lanka’ (தூய்மையான இலங்கை) திட்டத்தின் கீழ், மேல் மற்றும் தென் மாகாணங்களில் வீடுகளில் சேதனப் பசளை தயாரிக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, உள்ளூராட்சி நிறுவனங்களால் அடையாளம் காணப்படும் தெரிவுசெய்யப்பட்ட வீதிகள், சேதனக் கழிவுகளைச் சேகரிக்கும் சேவை வழங்கப்படாத வலயங்களாக அறிவிக்கப்படவுள்ளன.
இந்தப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள், தமது வீடுகளில் உருவாகும் மக்கும் கழிவுகளைத் தாங்களே உரமாக மாற்றி முகாமைத்துவம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தெரிவுசெய்யப்பட்ட வீடுகளுக்கு சேதனக் கழிவுகளை உரமாக மாற்றுவதற்கான உரத் தொட்டிகள் (Compost Bins) வழங்கப்படவுள்ளன.
ஆரம்பகட்டமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வேலைத்திட்டம், அதன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு ஏனைய மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
2027 முதல் 2029 ஆம் ஆண்டு வரையான மூன்று வருட காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘தூய்மையான இலங்கை – பிவிதுரு புரவர’ தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் நாளாந்தம் உருவாகும் திண்மக் கழிவுகளில் சுமார் 50 முதல் 60 சதவீதமானவை மக்கும் சேதனக் கழிவுகள் என அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
இவ்வாறான கழிவுகளை வீடுகளிலேயே உரமாக மாற்றுவதன் மூலம், கழிவுகளைச் சேகரித்தல், போக்குவரத்து, வகைப்படுத்தல், மீள்சுழற்சி மற்றும் இறுதியாக அகற்றுதல் ஆகியவற்றுக்கான செலவுகளைப் பெருமளவில் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு உரம் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப வழிகாட்டல்களும் தேவையான அறிவும் வழங்கப்படவுள்ளதுடன், அதன் நடைமுறைப்படுத்தலை உள்ளூராட்சி நிறுவனங்கள் மேற்பார்வை செய்யவுள்ளன.
தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இதனை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.








