கொழும்பில் சிறிய மழைக்கே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமாகவும், வடிகால் கட்டமைப்புகளைத் தடைசெய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டடங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபை எச்சரித்துள்ளது.
நியூஸ் ஃபர்ஸ்ட் செய்திச் சேவையின் படி, கொழும்பு மாநகர சபையின் நீர் வழங்கல் மற்றும் வடிகால் பிரிவின் பணிப்பாளரும் பொறியியலாளருமான மனோஜ் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.நகரில் வெள்ளப்பெருக்கைக் குறைக்கும் நோக்கில், இவ்வாறான அனுமதியற்ற கட்டடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, மட்டக்குளி ஸ்ரீ விக்கிரம வீதி மற்றும் பிமெல்வத்தை வீதி ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட அனுமதியற்ற கட்டடங்கள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், அடையாளம் காணப்பட்ட ஏனைய அனுமதியற்ற கட்டடங்களுக்குப் பொறுப்பான தரப்பினருக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மனோஜ் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.நகரில் வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக அமையும் இவ்வாறான கட்டுமானங்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.








