இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ராவல்பிண்டியில் இன்று (9) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அஸான் அவ்வைஸ் 30 ஓட்டங்களையும், தய்யப் ஆரிப் 57 ஓட்டங்களையும் பெற்று சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.
தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் பாபர் அசாம் 50 ஓட்டங்களையும், மொஹமட் தாஹா 51 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் சௌத் ஷகீல் 57 ஓட்டங்களுடனும், காசி கோரி 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும், மிலான் ரத்நாயக்க, தில்ஷான் மதுஷங்க மற்றும் சொனால் தினுஷ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மேலும், விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் 4 பிடியெடுப்புகளை மேற்கொண்டு இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு வலுசேர்த்தார்.
இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை (10) தொடரவுள்ளது.








