அப்ரா அன்சார்
அல்ஜஸீரா ஊடக வலையமைப்பு தனது 30ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், அதன் அரபு மொழி செய்திச் சேவைகளில் குறிப்பிடத்தக்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
1996 நவம்பர் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அல்ஜஸீரா, அரபு ஒலிபரப்புத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திய ஊடக வலையமைப்பாகத் திகழ்கிறது.
இதுவரை புறக்கணிக்கப்பட்ட அரசியல் கண்ணோட்டங்களைப் பிரதான நீரோட்டத்துக்குக் கொண்டுவந்ததுடன், பிராந்திய தொலைக்காட்சிகளில் வெளிப்படையாக விவாதிக்கப்படாத பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களுக்கான தளத்தையும் அது உருவாக்கியது.
அல்ஜஸீராவின் 30ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விசேட நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை கட்டாரின் தலைநகர் தோஹாவில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அல்ஜஸீரா ஆரம்பிக்கப்பட்டது வெறுமனே ஒரு தொலைக்காட்சித் திரையாக இருக்கவில்லை என அதன் பணிப்பாளர் நாயகம் ஷேக் நாசர் பின் பைசல் அல் தானி தெரிவித்தார்.
“பத்திரிகைத்துறை சுதந்திரமாகவும் பொறுப்புடனும் இருக்க முடியும் என்ற வாக்குறுதியாக அது அமைந்தது. ‘ஒரு கருத்தும் மற்றொரு கருத்தும்’ என்பது வெறும் கோஷமல்ல; அது நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஒரு நிலைப்பாடாகும்” என அவர் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று தசாப்தங்களாக அரபு உலகில் செய்தி அறிக்கையிடப்படும் முறையை அல்ஜஸீரா மாற்றியமைக்க உதவியுள்ளதாக அதன் செய்திப் பணிப்பாளர் ரயீத் ஃபகீஹ் தெரிவித்துள்ளார்.
இதுவரை உரிய இடம் வழங்கப்படாத குரல்கள், விவகாரங்கள் மற்றும் கண்ணோட்டங்களுக்கு அல்ஜஸீரா இடமளித்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.
“அல்ஜஸீராவின் 30ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இன்றைய நிலையில், எமது செய்தி ஆசிரியர் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, செய்தி அறிக்கையிடலின் பரப்பை விரிவுபடுத்தவும், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கண்ணோட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு நிறைவு நிகழ்வு, அல்ஜஸீரா ஊடக வலையமைப்பின் அரபு மொழி செய்திச் சேவைகளில் மேற்கொள்ளப்படும் குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புடன் இணைந்துள்ளது.
இதன்படி, தொடர்ச்சியான உடனடிச் செய்தி ஒளிபரப்பு, நேரடி நிகழ்வுகளின் ஒளிபரப்பு மற்றும் ஆழமான செய்தி அறிக்கையிடல் ஆகியவை மூன்று தனித்தனி அலைவரிசைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.
கட்டாரின் மறைந்த முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசை, அரபு உலகில் முதன்முறையாக உருவாக்கப்பட்டதாகும்.
ஆரம்பம் முதலே “ஒரு கருத்தும் மற்றொரு கருத்தும்” என்ற கொள்கையை முன்னிறுத்தி அல்ஜஸீரா செயற்பட்டு வருகின்றது.
1996ஆம் ஆண்டு தோஹாவிலிருந்து அரபு மொழி செய்மதித் தொலைக்காட்சி செய்தி அலைவரிசையாக தனது முதல் ஒளிபரப்பை ஆரம்பித்த அல்ஜஸீரா, பின்னர் பல்வேறு மொழிகளில் இயங்கும் ஊடக நிறுவனங்களைக் கொண்ட அல்ஜஸீரா ஊடக வலையமைப்பாக வளர்ச்சியடைந்தது.
பொதுப் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்ட தனியார் நிறுவனமாக இயங்கும் இந்த வலையமைப்பு, தற்போது தொலைக்காட்சி அலைவரிசைகள், இணையத்தளங்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் தளங்களை உள்ளடக்கியுள்ளது.
மூலம்: Al Jazeera








