அப்ரா அன்சார்
அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல் பிரசாரத்தில் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. குறிப்பாக, மிச்சிகன் மாநிலத்தின் ஜனநாயகக் கட்சி செனட் வேட்பாளர் அப்துல் எல்-சயீத் இதற்கு முக்கிய இலக்காக மாறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எல்-சயீத்தை மீண்டும் மீண்டும் “ஜிஹாதிஸ்ட்” என அழைத்துள்ளதுடன், அவர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினராக இருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது பெயரை இலக்காகக் கொண்டு பலமுறை கேலியும் செய்துள்ளார்.
மேலும், எல்-சயீத் தேர்தலில் வெற்றிபெற்று செனட் சபைக்குள் நுழையும்போது, உலோகக் கண்டறியும் கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் ட்ரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் எல்-சயீதின் குடியரசுக் கட்சி எதிரணி வேட்பாளர் மைக் ரோஜர்ஸ் ஆகியோரும் அவர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.மறுபுறம், மினசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதி இல்ஹான் ஒமர், மீண்டும் தேர்தலில் போட்டியிடும் நிலையில், அவருக்கு எதிராகவும் தொடர்ச்சியாக இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அவர் அமெரிக்காவுக்கு எதிரானவர் மற்றும் யூத எதிர்ப்பாளர் எனச் சித்தரிக்கப்படுவதுடன், அவரது சோமாலிய இனப் பின்னணியையும் இலக்காகக் கொண்டு கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடாத பகுதிகளிலும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரசாரங்கள் வலுப்பெற்றுள்ளன.
டெக்சாஸ் மாநிலத்தில் குடியரசுக் கட்சியினர், “டெக்சாஸில் ஷரீஆ சட்டத்தை முழுமையாகத் தடை செய்வோம்” என்ற வாக்குறுதியை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல்வாதிகள் மட்டுமன்றி, தீவிர வலதுசாரி தூண்டுதலாளர்களும் ஜனநாயகக் கட்சியின் நிகழ்வுகளில் பங்கேற்று இஸ்லாமிய எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.








