அப்ரா அன்சார்
கொழும்பு:அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்கும் ‘Once Upon a Christmas – The Greatest Xmas Show’ எனும் பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் பொழுதுபோக்குத் துறையில் புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் நோக்கில், சீலோ என்டர்பிரைசஸ் (Ceilao Enterprises) நிறுவனம் இந்த சர்வதேச கலை நிகழ்ச்சியை இலங்கைக்குக் கொண்டுவருகிறது.
கூகா புரொடக்ஷன்ஸ் (Kooka Productions) மற்றும் ஐக்ரேவ் என்டர்டெயின்மென்ட் (ICrave Entertainment) ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்நிகழ்ச்சியில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற அவுஸ்திரேலிய சர்க்கஸ் கலைஞர்கள் மற்றும் முழுமையான அவுஸ்திரேலிய தயாரிப்புக் குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
சர்க்கஸ் சாகசங்கள், நேரடி இசை நிகழ்ச்சிகள் மற்றும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து அனைத்து வயதினரையும் கவரும் வகையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் வளாகத்தில் திறந்தவெளி அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு, ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த சீலோ என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மஞ்சுள குலதுங்க,
அவுஸ்திரேலியாவின் இந்தப் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சியை முதன்முறையாக இலங்கைக்குக் கொண்டுவருவது தமது நிறுவனத்தின் நீண்டகாலக் கனவு நனவாகும் தருணம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யாமல் சர்வதேச தரத்திலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அனுபவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்றும், இந்த நிகழ்ச்சி கொழும்பின் இரவு நேரப் பொழுதுபோக்குத் துறையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை 2026 நவம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதற்கிடையில், 20,000 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்யும் விருந்தினர்களுக்கு, சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் வளாகத்திலுள்ள உணவகங்களில் பயன்படுத்தக்கூடிய 5,000 ரூபா பெறுமதியான உணவு மற்றும் பான வவுச்சர் வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, குறைந்தபட்சம் 20 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு விசேட இருக்கை மற்றும் உணவு ஏற்பாடுகளுடன் கூடிய விருந்தோம்பல் பொதிகளும் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வ விருந்தோம்பல் பங்காளராக சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் செயற்படுகிறது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சின்னமன் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸின் கொழும்பு ஹோட்டல்களுக்கான சிரேஷ்ட துணைத் தலைவரும், சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் சின்னமன் லைஃப் நிறுவனத்தின் பொது முகாமையாளருமான கமல் முனிசங்க,
கிறிஸ்மஸ் பண்டிகை மக்களை ஒன்றிணைக்கும் காலப்பகுதி என்பதால், சர்வதேச பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் உயர்தர விருந்தோம்பலையும் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியின் பங்காளராக இருப்பதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சி இலங்கையின் சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் நிகழ்வு முகாமைத்துவத் துறைகளுக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.











