சம்பள மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகள், வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, எதிர்வரும் சில நாட்களில் இலங்கையின் முக்கிய வைத்தியசாலைகளில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அச்சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வைத்தியர்கள் மற்றும் நாட்டின் இலவச சுகாதாரக் கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதே இந்தப் போராட்டங்களின் நோக்கம் என சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பாரிய தியாகங்களைச் செய்துள்ளதாகவும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் முன்னெடுத்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மேலதிக சேவை மற்றும் விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பங்கை விட்டுக்கொடுத்ததாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், நாட்டின் பொருளாதாரம் மீட்சியடைந்து வருவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்ற போதிலும், சுகாதாரத்துறை பணியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என GMOA குற்றஞ்சாட்டியுள்ளது.
சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடுவதற்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பிலும் கலந்துரையாடக் கோரியதாகக் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இதுவரை அதிகாரிகளிடமிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
குறைக்கப்பட்ட கொடுப்பனவுகளை மீள வழங்குதல், சுகாதாரப் பணியாளர்களின் சேவைக்கு ஏற்ற நியாயமான சம்பளத்தை வழங்குதல் மற்றும் கடமைகளைச் சிறப்பாக முன்னெடுப்பதற்கான போதிய வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களை அவசரமாக நியமித்தல், மருந்துப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளையும் முன்வைக்கவுள்ளதாக GMOA தெரிவித்துள்ளது.
இலவச சுகாதாரக் கட்டமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.










