நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 5,829 குடும்பங்களைச் சேர்ந்த 21,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி முதல் இன்று (03) வரையான காலப்பகுதியில் இந்தப் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் 19 மாவட்டங்களில் உள்ள 147 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சீரற்ற வானிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். மேலும், மூவர் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன், எட்டு வீடுகள் முழுமையாகவும், 767 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையால் இரத்தினபுரி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது அதிக பாதிப்பு புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
இதன்படி, புத்தளம் மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.








