அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் குடியிருப்புப் பகுதியில் 9 பேருடன் பயணித்த ‘லியர்ஜெட் 60’ (Learjet 60) ரக சிறிய விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்காவின் பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கிழக்கு நேரப்படி பிற்பகல் 12.50 மணியளவில் (1750 GMT) கிரெஸ்ட்ஹேவன் (Cresthaven) குடியிருப்புப் பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விமானத்தில் பயணித்த 9 பேரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் ஷீன் டஃபி (Sean Duffy) தனது சமூக வலைத்தளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
டெக்சாஸ் மாநிலத்தின் ஒஸ்டின்-பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், பஹாமஸில் உள்ள வடக்கு எலுதேரா (North Eleuthera) விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புச் சபை தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







