எழுதியவர்: அப்ரா அன்சார்
காஸா – அதிகாலை 4 மணி!

காஸா இன்னும் இருளிலும் அமைதியிலும் மூழ்கியிருக்கிறது. ஆனால், ஷேக் இஜ்லின் பகுதியில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் கலீத் அபு மதீனின் ஒவ்வொரு நாளும் முன்பே ஆரம்பமாகிவிட்டது.
காஸா நகரின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தனது திராட்சைத் தோட்டத்தில், தொழிலாளர்களுடன் வரிசையாக நிற்கும் கொடிகளுக்கு இடையே அவர் நடந்து செல்கிறார். போர் அழிவுகளுக்கு மத்தியிலும் உயிர் தப்பிய திராட்சைக் கொடிகளை ஒவ்வொன்றாகப் பார்த்து, பழுத்துள்ள திராட்சைக் கொத்துகளை அறுவடை செய்கிறார்.
அதிகாலை காற்று சற்று குளிராக வீசுகிறது. சூரியனின் முதல் ஒளிக்கீற்றுகள் தோட்டத்தின் மீது படரத் தொடங்குகின்றன. அந்த ஒளியில், பசுமையாகத் துளிர்க்கும் திராட்சைக் கொடிகளின் வரிசைகள் மெதுவாகத் தென்படுகின்றன.
ஒரு காலத்தில் மீண்டும் காண முடியுமா என்றே கலீத் அஞ்சிய காட்சி அது.
50 வயதான கலீத்துக்கு, இந்த ஆண்டு கிடைத்திருப்பது வெறும் திராட்சை அறுவடை அல்ல.
அவர் இழந்துவிட்டதாக நினைத்திருந்த ஒரு வாழ்க்கையின் மீள்வரவு.
“நான் மீண்டும் எனது ஆன்மாவிடம் திரும்பியதைப் போல உணர்கிறேன்” என்கிறார் அவர்.
Al Jazeera-வுக்கு வழங்கிய தகவல்களின்படி, காஸாவில் போர் ஆரம்பித்த பின்னர் கலீத்தின் வாழ்க்கையும் அவரது குடும்பத்தின் பல தலைமுறைகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த விவசாய நிலமும் முற்றிலும் மாறிப்போனது.
தலைமுறைகளைத் தாண்டிய நிலம்!
ஷேக் இஜ்லினில் கலீத்தின் குடும்பம் பல தலைமுறைகளாக திராட்சை மற்றும் அத்திப்பழங்களைப் பயிரிட்டு வருகிறது.
அவரது தந்தையிடமிருந்தும் தாத்தாவிடமிருந்தும் வந்த பரம்பரை நிலமே இந்தத் தோட்டம்.
ஒரு கட்டத்தில் திட்ட முகாமைத்துவத் துறையில் பணியாற்றிய கலீத், இறுதியில் தனது குடும்பத்தின் விவசாயத் தொழிலையே முழுநேரத் தொழிலாகத் தேர்ந்தெடுத்தார்.
ஆனால் 2023 ஒக்டோபரில் போர் ஆரம்பமானது.
அப்போது கலீத்துக்கு காஸாவை விட்டு வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் இருந்தது. அவரது மனைவி லெபனான்–இத்தாலிய பின்னணியைக் கொண்டவர். கலீத்தும் முன்னதாக இத்தாலியில் கல்வி கற்றவர். அங்கு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களையும் பெற்றிருந்தார்.
பாதுகாப்புக்காக இத்தாலிக்குச் செல்வது அவருக்கு ஒரு நியாயமான முடிவாக இருந்திருக்கலாம்.
ஆனால் அதற்கு ஒரு தடையாக இருந்தது – தனது திராட்சைத் தோட்டத்தை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது.
அதை கலீத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
போரின் முதல் சில மாதங்களில், ஆபத்து அதிகரித்த நிலையிலும் அவர் காஸா நகரிலேயே தங்கியிருந்தார்.
பின்னர் அவரது மனைவியும் பிள்ளைகளும் இத்தாலிக்கு வெளியேற்றப்பட்டனர். ஆனால் கலீத் அங்கேயே இருந்தார் – தனது நிலத்திற்கும் வயதான தாயாருக்கும் அருகில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்.
எனினும், பின்னர் தனது நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
இஸ்ரேலிய தாக்குதல்கள் தனது பகுதியை நெருங்கியபோது, உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு தொலைபேசி அழைப்பொன்று வந்ததாக கலீத் Al Jazeera-விடம் தெரிவித்துள்ளார். வெளியேறாவிட்டால் வீடு குண்டுவீசித் தாக்கப்படும் என எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
“எனக்கு வேறு வழியில்லை. எனது தாயாருடன் அங்கிருந்து வெளியேறி மத்திய காஸாவில் உள்ள டெய்ர் அல்-பலாவுக்குச் சென்றேன்” என அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
ஆனால் உடலால் தனது நிலத்தை விட்டு விலகியிருந்தாலும், மனதால் கலீத் தனது திராட்சைக் கொடிகளிடமிருந்து விலகவில்லை.
வடக்கு காஸா, குறிப்பாக காஸா நகரம், போரில் கடுமையாக அழிக்கப்பட்டிருந்த போதிலும், தனது வயல்களைப் பார்க்க அவர் பலமுறை திரும்பிச் செல்ல முயன்றார்.
அத்தகைய ஒரு முயற்சியின்போது, இரண்டு தொழிலாளர்களுடன் வயல்களைப் பார்வையிடச் சென்றதாக அவர் கூறுகிறார்.
அப்போது இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் ஒரு தொழிலாளர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“துப்பாக்கிச் சூட்டிலிருந்து நாங்கள் ஓடினோம். அவர் அதிகளவு இரத்தத்தை இழந்திருந்தார். பல மணி நேரம் அங்கேயே இருந்து, இறுதியில் அவரை மீட்க முடிந்தது” என Al Jazeera-விடம் கலீத் தெரிவித்துள்ளார்.
அந்த அனுபவத்திற்குப் பின்னரும், ஒரு எண்ணம் மட்டும் அவரது மனதை விட்டு அகலவில்லை.
தனது திராட்சைக் கொடிகளிடம் அவர் மீண்டும் செல்ல வேண்டும்.
அழிவின் மத்தியில் மீண்டும் துளிர்த்த பசுமை!

இஸ்ரேலின் போரினால் காஸா பெரும் அழிவைச் சந்தித்துள்ளது.
73,000-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்கின்றனர்.
காஸாவின் மறுசீரமைப்பும் முடங்கிய நிலையிலேயே உள்ளது.
ஒக்டோபரில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர், பாலஸ்தீனியர்கள் தங்களது நிலங்களுக்கு மெதுவாகத் திரும்புவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு கலீத்துக்கும் கிடைத்தது.
ஆனால் தனது நிலத்திற்குத் திரும்பியபோது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடையச் செய்தது.
அவரது திராட்சைக் கொடிகளில் சுமார் 60 சதவீதம் வேரோடு பிடுங்கப்பட்டிருந்தன.
பல தசாப்தங்களாக நிலைத்து நின்ற பழமையான மரங்களும் அழிக்கப்பட்டிருந்தன. தனக்குத் தெரிந்திருந்த நிலம் கிட்டத்தட்ட அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறியிருந்தது.
ஆனால் கலீத் அங்கேயே நின்றுவிடவில்லை.
புல்டோசர்களும் தொழிலாளர்களும் கொண்டு வரப்பட்டனர். குவிந்து கிடந்த மணல் அகற்றப்பட்டது. நிலம் சமப்படுத்தப்பட்டது.
உயிர் தப்பியிருந்த திராட்சைக் கொடிகளைப் பாதுகாக்கும் பணியும் ஆரம்பமானது.
“நான் மீண்டும் எனது ஆன்மாவிடம் திரும்பியதைப் போல…”

இந்த மறுசீரமைப்பு மலிவானதல்ல.
தனது திராட்சைத் தோட்டத்தை போருக்கு முந்தைய நிலைக்குக் கொண்டுவர குறைந்தது 40,000 அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என கலீத் மதிப்பிட்டுள்ளார்.
விவசாயத்துக்குத் தேவையான பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட பல பொருட்களைப் பெறுவதும் கடினமாகியுள்ளது. காஸாவுக்குள் பொருட்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளும் விவசாயிகளின் சிரமங்களை அதிகரித்துள்ளன.
ஆயினும், கலீத்தின் முயற்சிக்கு சிறிய வெற்றி கிடைத்தது.
வசந்த காலம் வந்தபோது, பழைய வேர்களில் இருந்து புதிய தளிர்கள் முளைக்கத் தொடங்கின.
திராட்சைக் கொடிகள் மீண்டும் உயிர் பெறத் தொடங்கின.

“திராட்சைக் கொடிகள் மீண்டும் வளர்வதைப் பார்த்தது மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. நீண்ட கால துயரத்துக்குப் பின்னர், மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கலந்த உணர்வு ஏற்பட்டது” என Al Jazeera-விடம் கலீத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு அவரது அறுவடை, போருக்கு முந்தைய காலத்தில் கிடைத்த அறுவடையில் சுமார் 40 சதவீதம் மட்டுமே என அவர் மதிப்பிட்டுள்ளார்.
விவசாயத்தின் வழக்கமான அளவுகோலில் இது ஒரு குறைவான அறுவடை.
ஆனால் கலீத்துக்கு இது ஒரு மாபெரும் வெற்றி.
ஒரு கிலோ திராட்சை 30 ஷேக்கல்கள் வரை!
ஷேக் இஜ்லின் பகுதி நீண்ட காலமாக திராட்சை மற்றும் அத்திப்பழச் சாகுபடிக்குப் பெயர் பெற்றது.
தலைமுறைகளாக இப்பகுதி குடும்பங்கள் இந்தப் பழங்களைப் பயிரிடும் அறிவையும் அனுபவத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தி வந்துள்ளன.
இங்குள்ள திராட்சைகள் அவற்றின் இனிப்புக்கும் தனித்துவமான சுவைக்கும் பெயர் பெற்றவை.
ஆனால் இந்த ஆண்டு உள்ளூர் திராட்சைகளின் பற்றாக்குறை காரணமாக அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
போருக்கு முன்னர் ஒரு கிலோகிராம் திராட்சை சுமார் 4 முதல் 5 ஷேக்கல்கள் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 20 முதல் 30 ஷேக்கல்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்கு பயிரின் பற்றாக்குறையுடன், போரினால் சேதமடைந்த நிலங்களை மீண்டும் சீரமைத்து விவசாயம் செய்வதற்கான அதிகரித்த செலவுகளும் காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் கலீத்துக்கு இந்தத் திராட்சைகளின் மதிப்பு அதன் விலையை விடப் பெரிது.
ஒரு கொடியிலிருந்து மற்றொரு திராட்சைக் கொத்தை அவர் அறுக்கும் ஒவ்வொரு தருணத்திலும், மீண்டும் ஒருபோதும் காண முடியாது என நினைத்திருந்த ஒன்றின் மீள்வரவை அவர் காண்கிறார்.
“மீனும் கடலும் போல…”
மண்ணுக்குள் புதைந்து உயிர் தப்பியிருந்த வேர்களில் இருந்து மீண்டும் வளர்ந்த திராட்சைக் கொடிகளை கலீத் பார்க்கிறார்.
அந்தக் காட்சியில் அவர் தனது குடும்பத்தின் பல தலைமுறைகளைக் காண்கிறார்.
அவருக்கு முன்பாக இந்த மண்ணில் உழைத்த தந்தையையும் தாத்தாவையும் நினைவுகூர்கிறார்.
அறுவடை இன்னும் பழைய அளவின் ஒரு சிறு பகுதி மட்டுமே.
ஆனால் அது இருக்கிறது. அவரும் இருக்கிறார்.
போருக்குப் பின்னர் இந்த நிலம் தனக்கு இன்னும் அதிக மதிப்புடையதாகிவிட்டதாக கலீத் கூறுகிறார்.
அதனை அவர் ஒரு மீனுக்கும் கடலுக்கும் இடையிலான உறவுடன் ஒப்பிடுகிறார்.
“ஒரு மீனால் கடலுக்கு வெளியே வாழ முடியாததைப் போல, நானும் அப்படித்தான். இதுதான் என் ஆன்மா” என Al Jazeera-விடம் கலீத் தெரிவித்துள்ளார்.
அழிவால் சூழப்பட்ட காஸாவில், மீண்டும் துளிர்க்கும் அந்த திராட்சைக் கொடிகள் வெறும் ஒரு விவசாயியின் அறுவடையல்ல.
அவை இழப்புகளுக்கு மத்தியிலும் வாழ்க்கை மீண்டும் துளிர்க்க முடியும் என்பதற்கான நம்பிக்கையின் அடையாளம்.
மூலம்: Al Jazeera









