அப்ரா அன்சார்
ஈரானியர்கள் அதிகரித்து வரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறுகிய காலத்தில் இதிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொள்ளப்பட்டு வரும் போருக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், பெரும்பாலான ஈரானியர்களின் வாழ்க்கை மோசமடைந்துள்ளது.
போரால் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈரானின் இராணுவ மற்றும் அரசியல் கட்டமைப்பு தங்களைத் தக்கவமைத்துக் கொண்டுள்ள போதிலும், தங்களது கொள்கை நிலைப்பாடுகளில் எந்தவிதமான பெரிய விட்டுக்கொடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், நாட்டின் சுமார் 9 கோடி மக்களில் பெரும்பாலானோருக்கு அன்றாட வாழ்க்கை பெரும் போராட்டமாக மாறியுள்ளது.
“மற்றவர்களுடன் தொடர்ந்து மோதிக்கொள்ள வேண்டியதில்லாத, உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து மேலும் தனிமைப்படுத்தப்படாத, உயிர்வாழ்வதற்காக தொடர்ந்து திட்டமிட வேண்டிய அவசியமில்லாத ஒரு வாழ்க்கையை மட்டுமே நான் விரும்புகிறேன்” என தெஹ்ரானில் வசிக்கும் மர்ஜன் என்ற இளம் பெண், பாதுகாப்பு காரணங்களுக்காக தனது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்தி அல்ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
“அந்த வாழ்க்கையைப் பற்றியே நான் தொடர்ந்து சிந்திக்கிறேன். அதை உருவாக்குவதற்கான வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை நினைத்து விரக்தியடைகிறேன். பின்னர் மற்றொரு நாளை கடந்து செல்கிறேன். இது மிகவும் சோர்வடையச் செய்யும் சுழற்சியாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் இராஜதந்திரம்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் பெப்ரவரி 28ஆம் திகதி போர் ஆரம்பமானது. இந்தத் தாக்குதல்களில் அப்போதைய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் அரசின் ஏனைய அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
எனினும், அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததுடன், மறைந்த தலைவரின் மகனான மொஜ்தபா கமேனி நாட்டின் உச்சத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். எனினும், அவர் பொதுவெளியில் அதிகம் தோன்றவில்லை. அதேவேளை, பல இராணுவத் தளபதிகளும் மாற்றப்பட்டனர்.
அரசாங்கத்திற்குள் போரை இராஜதந்திர ரீதியாக முடிவுக்குக் கொண்டுவர விரும்புவோர் ஒருபுறமும், அமெரிக்கா தோல்வியடைந்து பின்வாங்கும் வரை போராட வேண்டும் என விரும்புவோர் மறுபுறமும் உள்ளனர். எனினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் ஈரான் “சரணடையாது” என்பதில் அனைவரும் உடன்படுகின்றனர்.
ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து போருக்கு முந்தைய அளவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்துள்ள நிலையில், அந்த நீரிணை வழியாக போக்குவரத்துப் பாதையைத் திறப்பது தொடர்பில் ஓமானுடன் புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் இந்த உடன்பாட்டுக்கு எதிராக இருப்பதாகவும், நீரிணையை முழுமையாகவும் தடையின்றியும் மீண்டும் திறக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இரு தரப்புக்கும் இடையே குறிப்பிடத்தக்க முரண்பாடுகள் தொடர்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க சர்வதேச மத்தியஸ்தர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். எனினும், வொஷிங்டன் தெஹ்ரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், எந்தவொரு முன்னேற்றமும் தென்படவில்லை.
சரிவடைந்த ஊதியங்கள்!

பல தசாப்தங்களாக நிலவி வரும் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல், பொருளாதாரத் தடைகள் மற்றும் வெளிப்புற அழுத்தங்கள் காரணமாக ஈரானின் பொருளாதாரம் தற்போது அதன் முழுத் திறனில் ஒரு சிறிய பகுதியிலேயே இயங்கி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான காலம் ஈரான் “போருமில்லை, சமாதானமுமில்லை” என்ற நிலையில் இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இரண்டு போர்களும் முற்றுகைகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் ஈரானின் பொருளாதார எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பவர்கள் மிகக் குறைவு.
ஆகஸ்ட் 22ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஈரானிய நாட்காட்டியின் ஐந்தாவது மாதமான மொர்தாத் மாதத்தில், பணவீக்கம் முந்தைய ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 89 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஈரானின் புள்ளிவிவர மையம் தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலையேற்றம் 127 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்துள்ளது.
தெஹ்ரான் நகரின் மத்திய பகுதியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனமொன்றில் தரவு ஆய்வாளராகப் பணியாற்றும் பிஜான், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தபோது தனது மாதச் சம்பளம் 1,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக இருந்ததாகக் கூறினார்.
“மூன்று முறை சம்பள உயர்வு கிடைத்தபோதிலும், தற்போது எனது சம்பளத்தின் பெறுமதி 500 டொலருக்கும் குறைவாகவே உள்ளது” என அவர் அல்ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், ஒரு தசாப்தத்துக்கு முன்னர் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த பின்னர் ஈரானை விட்டு வெளியேறியிருந்தால் தனது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என சில நேரங்களில் சிந்திப்பதாக 33 வயதான பிஜான் தெரிவித்துள்ளார்.
“அந்த நேரத்தில் நிலைமை இவ்வளவு மோசமாகிவிடும் என யாரும் நினைக்கவில்லை” என அவர் கூறினார்.
ஈரானின் நாணயமான ரியால், சனிக்கிழமை (29)தெஹ்ரானின் திறந்த சந்தையில் அமெரிக்க டொலருக்கு எதிராக 20.6 இலட்சம் என்ற புதிய வரலாற்றுச் சரிவை சந்தித்தது.
போரின்போது ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள், பெட்ரோ இரசாயன மற்றும் எஃகு ஆலைகள், மின்சார மற்றும் ஏனைய பயன்பாட்டு நிலையங்கள், வீடுகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இதன் தாக்கமும் பொருளாதாரத்தில் பிரதிபலித்துள்ளது.
உலகின் அதிக வளங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றான ஈரான் தற்போது மோசமடைந்து வரும் எரிபொருள் மற்றும் மின்சார பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. எதிர்வரும் குளிர்காலத்தை முன்னிட்டு இயற்கை எரிவாயு பற்றாக்குறைக்கும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
தனியார் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அரசாங்கம் ஏற்கனவே குறைத்துள்ளதுடன், இன்னும் சில வாரங்களில் பெட்ரோல் விலையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
சமூக நிலை!

போர் தொடர்பில் “ ஒற்றுமை” என்ற செய்தி உலகிற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என ஈரானிய அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் தங்களது கருத்துகளை பகிரங்கமாக தெரிவிக்கத் தயங்கினாலும், அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு இடையே வெளிப்படையான வேறுபாடுகள் காணப்படுகின்றன.
“சமூக ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறேன்” என உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சமீபத்திய பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சில மணி நேரங்களுக்குப் பின்னர், அரசாங்கம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், எண்ணெயை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், முற்றுகைக்கு உள்ளாகியுள்ள மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் ஜனாதிபதி பெசெஷ்கியான் அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு எதிரானதாகக் கருதப்படும் நடவடிக்கைகள் மற்றும் கருத்துகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நீதித்துறை மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற 12 நாள் போரின்போதும், ஜனவரி மாதம் நாடு முழுவதும் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின்போதும் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக ஒவ்வொரு வாரமும் புதிய மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதாக நீதித்துறை அறிவித்து வருகிறது.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரானியர்கள் தொடர்புகொள்ளக் கூடாத தனிநபர்கள் மற்றும் ஊடகங்களின் பட்டியலையும் உளவுத்துறை அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்டுள்ளது.
இந்த மரண தண்டனைகளை ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ளன.
அதேவேளை, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் கட்டாய ஆடை விதிமுறைகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், கட்டாய ஹிஜாப் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த வாரம், இஸ்லாமிய விதிமுறைகள் மற்றும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் சட்டங்களுக்கு இணங்கவில்லை எனக் கூறி பல உணவகங்கள், ஐஸ்கிரீம் விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் இணையவழி விற்பனையாளர்களின் வர்த்தக நடவடிக்கைகள் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.
ஈரான் தலைநகரில் வசிக்கும் மற்றொரு இளைஞரான சசான், வெளிப்புற அழுத்தங்கள் அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டை மேலும் இறுக்குவதை அனுபவங்கள் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“சில நேரங்களில் நம்பிக்கையின்மையின் வலியை உணர்கிறேன். தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருந்தாலும், அனைத்துமே உங்களுக்கு எதிராகச் செயல்படுவதைப் பார்க்கும்போது, உங்கள் எதிர்காலம் பெரும்பாலும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்ற உணர்வு ஏற்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.








