வெறுப்பு நிறைந்த காலத்திற்கு கருணை தேவை; பிளவுபட்ட உலகிற்கு நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் நீதி, இரக்கம் மற்றும் மனித கண்ணியத்தின் செய்தி தேவை.
முஸ்லிம்கள் அண்ணல் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பை ஒரு வரலாற்று நிகழ்வாக மட்டுமன்றி, மனிதர்களின் உள்ளங்களையும், சமூகங்களையும், வரலாற்றின் போக்கையும் மாற்றியமைத்த ஒரு மகத்தான செய்தியின் தொடக்கமாகவும் நினைவுகூருகின்றனர்.
முஸ்லிம் உலகம் மீலாத் தினத்தை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், நாம் நம்மிடம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டும்: நாம் நபிகளாரின் பிறப்பை வெறுமனே கொண்டாடுகிறோமா? அல்லது அவர்களின் போதனைகளின்படி வாழ்கிறோமா?
வெறுப்பு, சகிப்பின்மை, இனவாதம் மற்றும் வன்முறை நிறைந்த இக்காலகட்டத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செய்தி இன்றும் மிகவும் பொருத்தமானதாக உள்ளது. அவர் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன், மனித கண்ணியத்தை நிலைநாட்டினார். ஒருவரின் இனம், நிறம், செல்வம் அல்லது சமூக அந்தஸ்தின் அடிப்படையில் அவரை மதிப்பிடக்கூடாது என்பதைப் போதித்தார்.
அமைதி என்பது பலவீனம் அல்ல; மன்னிப்பு என்பது சரணடைதல் அல்ல; கருணை என்பது தோல்வி அல்ல என்பதைத் தனது வாழ்க்கையின் மூலம் அவர் எடுத்துக்காட்டினார்.
ஏழைகள், அனாதைகள், விதவைகள் மற்றும் சமூகத்தில் நலிவுற்றவர்கள்மீது அவர் கொண்டிருந்த அக்கறை, சமூகப் பொறுப்புணர்வுக்கான காலத்தால் அழியாத முன்மாதிரியாகத் திகழ்கிறது. இறைநம்பிக்கை என்பது வெறுமனே வார்த்தைகளில் அல்ல; நல்லொழுக்கத்திலும், பிறரை நாம் நடத்தும் விதத்திலும் வெளிப்பட வேண்டும் என்பதை அவர் நினைவூட்டினார்.
இச்செய்தி இலங்கைக்கு குறிப்பாகப் பொருத்தமானதாகும். இனங்களுக்கு இடையிலான சந்தேகங்கள், இனப் பாகுபாடுகள் மற்றும் மத சகிப்பின்மை போன்றவற்றால் எமது நாடு கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தின் காயங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. ஒவ்வொரு சமூகமும் தீவிரவாதத்தை நிராகரித்து, பாகுபாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து, சக இலங்கையர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை, மீலாத் தினம் சுயபரிசோதனைக்கான ஒரு தருணமாக அமைய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது நாம் கொண்டுள்ள அன்பு, எமது வீடுகள், பணியிடங்கள், பாடசாலைகள் மற்றும் சமூகங்களில் நேர்மை, அன்பு, நீதி மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலம் வெளிப்பட வேண்டும்.
அவர் கருணையைப் போதித்திருந்தால், நாம் கருணையைக் காட்ட வேண்டும்.
அவர் நீதிக்காக நின்றிருந்தால், நாம் அநீதியை எதிர்க்க வேண்டும்.
அவர் மனித கண்ணியத்தை மதித்திருந்தால், நாம் பாகுபாட்டை நிராகரிக்க வேண்டும்.
அவர் அமைதியைப் போதித்திருந்தால், நாம் வெறுப்பைத் தவிர்க்க வேண்டும்.
அவர் மன்னித்திருந்தால், நாம் மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மீலாத் தினம் வெறுமனே உரைகள், அலங்காரங்கள் மற்றும் நிகழ்வுகளுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய மிகச் சிறந்த மரியாதை, அவர்களின் கொள்கைகளுக்கு எவ்வளவு உண்மையாக நாம் வாழ்கிறோம் என்பதிலேயே தங்கியுள்ளது.
நபிகளாரின் மரபு முஸ்லிம்களுக்கு உரியது என்றாலும், அவர் தனது வாழ்வில் வெளிப்படுத்திய கருணை, நீதி, நேர்மை, மன்னிப்பு மற்றும் மனித கண்ணியத்திற்கான மரியாதை ஆகிய விழுமியங்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் உரியவை.
இன்றைய பிளவுபட்ட உலகம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த உன்னத செய்தியை முன்னெப்போதையும் விட அதிகமாகத் தேவைப்படுகின்றது.
Editorial







