ஒகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,498,749 ஆக அதிகரித்துள்ளது.
ஒகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் 36,590 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம், மொத்த வருகைகளில் சுமார் 24 சதவீத பங்களிப்புடன் இந்தியா இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையாக தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.
இதே காலப்பகுதியில் 16,688 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் பிரித்தானியா இரண்டாவது இடத்திலும், 10,294 வருகைகளுடன் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியை கருத்திற்கொண்டாலும், 374,820 வருகைகளுடன் இந்தியா இலங்கையின் முன்னணி சுற்றுலாச் சந்தையாக தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் 147,089 வருகைகளுடன் பிரித்தானியா இரண்டாவது இடத்திலும், 98,801 வருகைகளுடன் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளன.








