மனிதநேயத்திற்கு முன்னால் இனம், மதம் உள்ளிட்ட அனைத்து பேதங்களையும் விட பரஸ்பர கௌரவம், நீதி, நியாயம், கருணை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பன்முகத்தன்மை மக்களைப் பிரிப்பதற்கான காரணியாக இருக்கக் கூடாது என்றும், மாறாக அதனை நாட்டின் பலமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு, ஏனைய மக்களின் உரிமைகள் மற்றும் நம்பிக்கைகளை மதித்து, எந்தவொரு மக்கள் பிரிவினரையும் கைவிடாத சமூகத்தை கட்டியெழுப்புவது அனைவரினதும் பொதுப் பொறுப்பு எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்த அமைதி, நீதி, நியாயம் மற்றும் நல்லிணக்கத்தின் பாதை இலங்கைக்கு புதிய ஒளியாக அமையட்டும் எனவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முழுவதும் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் இனிய மீலாதுன் நபி தின நல்வாழ்த்துக்களையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









