ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசிய மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், இந்தோனேசிய மகளிர் அணியை 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (2) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணி நிர்ணயித்த 125 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலளித்த இந்தோனேசிய அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்தோனேசிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி முதல் விக்கெட்டுக்காக 18 ஓட்டங்களைப் பெற்றதே அந்த இன்னிங்ஸில் பதிவான அதிகபட்ச இணைப்பாட்டமாக அமைந்தது. அதன்பின்னர், மேலும் 31 ஓட்டங்களைச் சேர்ப்பதற்குள் எஞ்சிய அனைத்து விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்தது.
இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி, தனது சிறந்த இருபதுக்கு 20 பந்துவீச்சுப் பெறுபேற்றை பதிவு செய்தார்.அவர் 3.3 ஓவர்களில் வெறும் 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, ஹெட்ரிக் உட்பட 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதற்கு முன்னர் இருபதுக்கு 20 போட்டிகளில் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சமரி அத்தபத்துவின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது.அவரது தற்போதைய பந்துவீச்சுப் பெறுபேறு, மகளிர் இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது சிறந்த பந்துவீச்சாக பதிவாகியுள்ளது. அவருக்கு முன்னர் நான்கு பந்துவீச்சாளர்கள் தலா 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
எனினும், ஐசிசியின் முழு உறுப்பு நாடொன்றின் வீராங்கனை ஒருவர் பதிவு செய்த சிறந்த மகளிர் T20I பந்துவீச்சாக சமரி அத்தபத்துவின் இந்த சாதனை அமைந்துள்ளது.
மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் இதுவரை சிறந்த பந்துவீச்சுப் பெறுபேற்றாக, பிரேசில் வீராங்கனை லாரா கார்டோசோ, லெசோத்தோ அணிக்கு எதிராக 4 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.









