இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, 7 வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தலைமைப் பயிற்றுவிப்பாளர் சர்ஃபராஸ் அஹ்மதும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய முஹம்மது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா, அலி உஸ்மான் மற்றும் குர்ரம் ஷஹ்சாத் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.அதேவேளை, தொடரில் விளையாடாத ஆமிர் ஜமால் மற்றும் முஹம்மது ஆவைஸ் ஜாஃபர் ஆகியோரும் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக சைம் அயூப் மற்றும் அப்துல்லா பசால் உள்ளிட்ட 7 வீரர்கள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.மேலும், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகாத அராஃபத் மின்ஹாஸ், முகமது இம்ரான் ஜூனியர், சயீத் பைக், முகமது இம்ரான் மற்றும் ரஸாவுல்லாஹ் ஆகிய 5 வீரர்களும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.மேலும், பயிற்றுவிப்பு குழுவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தலைமைப் பயிற்றுவிப்பாளர் சர்ஃபராஸ் அஹ்மத் மற்றும் உதவிப் பயிற்றுவிப்பாளர் உமர் குல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இறுதி டெஸ்ட் போட்டிக்காக பாகிஸ்தானின் வெள்ளைப் பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் மைக் ஹெசன் மற்றும் முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆஷ்லி நோஃப்கே ஆகியோர் பொறுப்பேற்கவுள்ளனர்.
ஹெடிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியும், லோர்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல் இரண்டு போட்டிகளிலும் இடம்பெற்ற நான்கு இன்னிங்ஸ்களிலும் பாகிஸ்தான் அணி 200 ஓட்டங்களுக்குக் குறைவான ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எதிர்கொண்ட சர்ச்சையாலும் பெரும் கவனம் பெற்றது. முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவரும் பிரதமருமான இம்ரான் கானின் மகன்கள் தொடர்பான நேர்காணல் ஒன்று போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, போட்டியையும் எஞ்சிய சுற்றுப்பயணத்தையும் கைவிடுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எச்சரித்திருந்தது.எனினும், பாகிஸ்தான் அணி போட்டியை தொடர்ந்து விளையாடியது. திட்டமிடப்பட்ட புறக்கணிப்பு தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என அணித்தலைவர் பாபர் அசாம் மற்றும் சர்ஃபராஸ் ஆகியோர் பின்னர் தெரிவித்திருந்தனர்.
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9ஆம் திகதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.









