இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச அளவில் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் தொடர்பான கவலைகள் இலங்கை கிரிக்கெட்டுக்கு (SLC) மட்டும் உரித்தானவை அல்ல என்றும், சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கூட்டங்களிலும் உலக கிரிக்கெட் சமூகத்திலும் இது தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இது SLC-ஐ மட்டும் பாதிக்கும் கேள்வி அல்ல; உலக கிரிக்கெட் முழுவதையும் கவலையடையச் செய்யும் விடயமாகும்” என சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், தற்போதைய எதிர்கால சுற்றுப்பயணத் திட்டம் (FTP) ஒவ்வொரு நாட்டுக்கும் சமமான அல்லது குறைந்தபட்ச எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளை உறுதி செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக ஒரு தொடரில் குறைந்தபட்சம் மூன்று டெஸ்ட் போட்டிகள் இடம்பெற வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது சில நாடுகள் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தற்போதைய உலக கிரிக்கெட் சூழலில், முதல் மூன்று அல்லது நான்கு நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவாக உள்ளது” என சங்கக்கார கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து போன்ற டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகள் ஆண்டுதோறும் குறைந்த எண்ணிக்கையிலான போட்டிகளில் மட்டுமே விளையாடுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, போதுமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு இல்லாத நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தும் வீரர்கள் நிலையான கிரிக்கெட் வாழ்க்கையை உருவாக்குவது கடினமாகும் என்றும் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
மற்ற கிரிக்கெட் வடிவங்களில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை டெஸ்ட் கிரிக்கெட்டை ஆதரிப்பதற்குப் பயன்படுத்துவது குறித்து நிர்வாகிகள் ஆராய வேண்டும் என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டை சந்தைப்படுத்தும் முறையிலும் மாற்றங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்ட் தொடர்களை நீண்ட காலத்திற்கு முன்பே சிறப்பாக விளம்பரப்படுத்துவதுடன், முன்னணி டெஸ்ட் வீரர்களின் அடையாளத்தையும் ரசிகர்கள் மத்தியில் வலுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறப்பாக செயல்படும் டெஸ்ட் வீரர்கள், T20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் அதே அளவு முக்கியத்துவத்தைப் பெற வேண்டும் என்றும், சில சந்தர்ப்பங்களில் அவர்களை “T20 நட்சத்திர வீரரைவிடவும் உயர்வாக” கொண்டாட வேண்டும் என்றும் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அட்டவணையில் காணப்படும் சமத்துவமின்மையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா தங்களது பாரம்பரியமான சுற்றுப்பயண முறைகளை தொடர்ந்து வரும் நிலையில், இந்தியா அதிக வர்த்தக மதிப்பை உருவாக்கும் நாடாக இருப்பதால் மற்ற நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக ரீதியாக வலுவான அணிகளின் சுற்றுப்பயணங்கள், பல கிரிக்கெட் சபைகளின் நிதி நிலைத்தன்மைக்கு முக்கியமானதாக அமையக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு எளிய தீர்வு எதுவும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்ட சங்கக்கார, ஒவ்வொரு நாட்டுக்கும் போதுமான டெஸ்ட் போட்டிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எதிர்கால FTP ஏற்பாடுகளை மாற்றுவதில் இலங்கை செல்வாக்கு செலுத்துவதுடன், ஏனைய கிரிக்கெட் சபைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிக டெஸ்ட் போட்டிகளைப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“FTP-யை மேலும் நியாயமானதாக மாற்றுவதில் நாம் செல்வாக்கு செலுத்தி, அதிக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்காக ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தால், இலங்கை கிரிக்கெட் மேலும் வலுவடையும்” என சங்கக்கார கூறியுள்ளார்.மேலும், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற வேண்டுமெனில் இலங்கை வலுவான டெஸ்ட் அணியாகவும் தொடர்ந்து இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.









