இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை இன்று வெளியிட்டுள்ளது.
2015 ஜனவரி 12 முதல் 2017 மே 22 வரை நிதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில், அப்போதைய தேசிய லொத்தர் சபையின் தலைவரான ஷமிலா பெரேராவுடன் இணைந்து, நிதியமைச்சின் விசேட திட்டமொன்றின் கீழ் மூன்று நபர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தியதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவர்களில் இருவர் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாகவும், ஒருவர் முகாமைத்துவ உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், குறித்த மூவரும் தேசிய லொத்தர் சபைக்கு எந்தவித சேவையும் வழங்கவில்லை எனவும், அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தேசிய லொத்தர் சபையின் நிதியிலிருந்து வழங்கப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, திருத்தப்பட்ட 1994 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலஞ்சச் சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் ஊழல் குற்றமாகும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ரவி கருணாநாயக்க இன்று பிற்பகல் சுமார் 1.40 மணியளவில் இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.










