இங்கிலாந்துக்கு எதிரான எதிர்வரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடருக்காக 16 பேர் கொண்ட ஒருநாள் மற்றும் T20I அணிகளை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இரு வடிவங்களிலும் குசல் மெண்டிஸ் அணித் தலைவராகவும், சரித் அசலங்க துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க மீண்டும் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், T20I அணியிலும் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளார். 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தயாரிப்புகள் முன்னெடுக்கப்படும் நிலையில், அவரது ஒருநாள் அணிக்கான மீள்வரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
லஹிரு உடார மற்றும் தரிந்து ரத்நாயக்க T20I அணியில் இடம்பெற்றுள்ளதுடன், பவன் ரத்நாயக்க, சச்சிந்து கொலம்பகே, அசித பெர்னாண்டோ மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் ஒருநாள் தொடருக்கான அணியில் மாத்திரம் இடம்பெற்றுள்ளனர்.
பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷாரா, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷண, துஷ்மந்த சமீர மற்றும் ஈஷான் மலிங்க ஆகியோர் இரு வடிவங்களுக்குமான அணிகளிலும் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணி செப்டெம்பர் 5ஆம் திகதி இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளது. அங்கு மூன்று T20I மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
T20I தொடர் செப்டெம்பர் 15ஆம் திகதி சவுத்தாம்ப்டனில் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து கார்டிஃப் மற்றும் மான்செஸ்டரில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஒருநாள் போட்டிகள் செப்டெம்பர் 22 முதல் 27ஆம் திகதி வரை டர்ஹாம், லீட்ஸ் மற்றும் லண்டனில் நடைபெறவுள்ளன.
இலங்கை ஒருநாள் அணி:
பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷாரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க (துணைத் தலைவர்), குசல் மெண்டிஸ் (தலைவர்), ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷண, சச்சிந்து கொலம்பகே, துஷ்மந்த சமீர, ஈஷான் மலிங்க, அசித பெர்னாண்டோ மற்றும் தில்ஷான் மதுஷங்க.
இலங்கை T20I அணி:
பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷாரா, லஹிரு உடார, குசல் மெண்டிஸ் (தலைவர்), கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க (துணைத் தலைவர்), ஜனித் லியனகே, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷண, தரிந்து ரத்நாயக்க, துஷ்மந்த சமீர, ஈஷான் மலிங்க, நுவன் துஷார மற்றும் பினுர பெர்னாண்டோ.









