அணுகுண்டு தயாரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் மஹ்மூத் நபவியான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானின் கோம் (Qom) நகரில் நடைபெற்ற சந்திப்பொன்றின்போது இந்த முன்மொழிவை முன்வைத்ததாகவும், அதற்கு அங்கிருந்த மக்கள் ஆதரவு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கு எதிரான தனது நீண்டகால நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனி, அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்குத் தடை விதிக்கும் மதத் தீர்ப்பொன்றை (Fatwa) வெளியிட்டிருந்தார்.
அதேவேளை, தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியான நோக்கங்களுக்காகவே முன்னெடுக்கப்படுவதாக ஈரான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
எனினும், கடந்த செப்டெம்பர் மாதம் அல் ஜஸீராவுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி, அணுவாயுதங்கள் தொடர்பான மதத் தீர்ப்புக்கு ஈரான் இன்னும் கட்டுப்பட்டு வருவதாகவும், அதன் அணுசக்திக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ‘எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.








