இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தை விட, எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் தலைமையிலான அரசாங்கம் சிறந்த தெரிவாக இருக்கும் என இஸ்ரேலிலுள்ள அரபு சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான சட்ட மையமான ‘அடாலா’ (Adalah) அமைப்பின் நிறுவனர் ஹசன் ஜபரீன் தெரிவித்துள்ளார்.
அல் ஜஸீராவுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த அவர், நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்தைத் தவிர வேறு எந்தவொரு அரசாங்கமும் சிறந்த தெரிவாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, காடி ஐசன்கோட் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி அணியும் அரபு தலைமையிலான கட்சிகளும் இணைந்து 67 ஆசனங்களைப் பெற்றுள்ளதாகவும், நெதன்யாகு தலைமையிலான அணி 53 ஆசனங்களையே பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது மொத்த நாடாளுமன்ற ஆசனங்களில் சுமார் 56 சதவீதமாகும். எனவே, ஐசன்கோட் அரசாங்கத்தை அமைக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், சிறுபான்மையினரைப் புறக்கணிக்கும் இனவாத நாடாக இஸ்ரேல் இருப்பதால், அரபு தலைமையிலான கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியும் என்பதை ஐசன்கோட்டின் கூட்டணிக் கட்சிகள் வெளிப்படையாக அறிவிப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும் ஜபரீன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐசன்கோட் முன்வரும் விருப்பத்தின் ஊடாகத் தீர்வு காணப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பலஸ்தீனர்கள் தங்களது ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்கும் அரசாங்கத்தையோ அல்லது தங்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுபவர்களுடன் இணைந்து ஆட்சி நடத்துவதையோ விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இது பலஸ்தீனர்களின் கனவு அரசாங்கம் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ‘குற்றவாளிகளால் வழிநடத்தப்படும் அரசாங்கத்திற்கும், ஆக்கிரமிப்பையும் பாகுபாட்டையும் தொடரக்கூடிய மற்றொரு அரசாங்கத்திற்கும் இடையிலான தெரிவாகவே இது உள்ளது. இருப்பினும், குறைந்தபட்சம் அது நெதன்யாகு தலைமையிலான அரசாங்கம் அல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவின் நான்கு ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர், வேறு எந்தவொரு அரசாங்கத்தையும் தாம் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








