கடந்த 24 மணித்தியாலங்களில் யெமனின் ஐந்து மாகாணங்கள் மீது 67 வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஹூதி கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
ஹூதிகளின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயிஸ், லஹிஜ், சஅதா, அல்-ஜவ்ஃப் மற்றும் மஅரிப் ஆகிய மாகாணங்கள் மீது குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மோதல் தீவிரமடைந்ததிலிருந்து இதுவரை நடத்தப்பட்ட மொத்த வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் எண்ணிக்கை 4,264 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஹூதி குழுவினர் யெமன் பொதுமக்கள் மற்றும் சவூதி விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள சவூதி தலைமையிலான கூட்டணி, குறித்த குழுவை இலக்கு வைத்து துல்லியமான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.







