திறைசேரியில் நிதியைச் சேர்ப்பதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது, பொதுமக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாழ்க்கைச் செலவு நாளாந்தம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மூன்று வேளை உணவைக்கூட உட்கொள்ள முடியாத குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பிள்ளைகளின் கல்வி மற்றும் ஏனைய செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலையில் பல குடும்பங்கள் காணப்படுகின்றன.
இதேவேளை, திறைசேரியில் போதியளவு நிதி இருப்பதாக ஜனாதிபதியும் சில அமைச்சர்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
எனினும், பொதுமக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கைகளை எடுக்காமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
மக்களுக்காகவே அரசாங்கம் செயற்பட வேண்டும். பொதுமக்களுக்கு பல்வேறு நலன்களை வழங்குவதாகக் கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
எனவே, திறைசேரியில் நிதியைச் சேர்ப்பதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது, அந்த நிதியைப் பொதுமக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களைக் குறைப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு அரசாங்கம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமையானது, பொதுமக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
எனவே, ஜனாதிபதியும் அமைச்சர்களும் பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.








