கொழும்பு: கொழும்பு நகரில் இன்று (06) மாலை சில மணித்தியாலங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரின் பல பகுதிகளில் பெய்த கடும் மழையால் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, புறக்கோட்டை மக்கள் பூங்கா, டாம் வீதி மற்றும் நோரிஸ் கால்வாய் வீதி உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மாலை நேரத்தில் பெய்த கடும் மழையால் பல வீதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன சாரதிகள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளனர்.
நகரின் பிரதான வீதிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மழை காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இன்றிரவு முழுவதும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று தொடர்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.












