ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் காவலில் இருந்த 29 வயதுடைய சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கவலை வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாகவும், பாரபட்சமின்றியும், வெளிப்படையாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இஷார ஹர்ஷகுமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான விசாரணையொன்றின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததாகச் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், அவரது உடலில் காயங்கள் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காயங்கள் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுவதாகக் குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாகச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதற்கு மாறுபட்ட தகவலை வெளியிட்டுள்ளார்.
பொலிஸ் நடவடிக்கையின்போது சந்தேகநபருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சந்தேகநபரின் மரணத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய நம்பகமானதும் சுயாதீனமானதுமான விசாரணை அவசியம் எனச் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொலிஸ் காவலில் உள்ள நபர்களின் உயிர், சுகாதாரம் மற்றும் உடல் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அடிப்படைப் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் காவலில் சித்திரவதை அல்லது துன்புறுத்தல் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவை தீவிரமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும், தவறுகள் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றம் பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளதுடன், ஹோமாகம உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பகட்ட விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் முறையாகப் பாதுகாக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவதைப் பொலிஸ் மா அதிபரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும் எனச் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
அத்துடன், எந்தவிதமான தலையீடுகளும் பாரபட்சங்களும் இன்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
தேவை ஏற்படின் இவ்விடயம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து தனது உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவிக்கவுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.








