வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் நாட்டைச் சூழவுள்ள ஆழமான, ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (27) முற்பகல் 8 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 12 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவிய ‘அர்னாப்’ தீவிர புயல் மேலும் வலுவடைந்து, ‘மிகத் தீவிர புயலாக’ மாற்றமடைந்துள்ளது.
இன்று (27) அதிகாலை 2.30 மணியளவில், வட அகலாங்கு 15.9 மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4 என்ற புவியியல் அமைவிடத்தில், காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கிலோமீற்றர் வடகிழக்குத் திசையில் இந்தப் புயல் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி வரை மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக்கூடும் எனவும், அதன் பின்னர் வடமேற்குத் திசையில் நகர்ந்து நாளை (28) முற்பகல் 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேசக் கடற்கரை ஊடாக இந்தியாவைக் கடக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 80 முதல் 140 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். அத்துடன், பலத்த இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் 3 முதல் 4 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை குறித்த கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே குறித்த கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








