சவூதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அத்வாஜ் சந்தித்துள்ளார்.
அனோஜன் சிவராசாவுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்து, வழக்கை மீண்டும் விசாரணைக்கு அனுப்புவதற்கு சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அனோஜன் சிவராசாவின் எதிர்கால வழக்கு நடவடிக்கைகள் குறித்து தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், எதிர்கால நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அவருக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்துவதுடன், தேவையான சட்ட உதவிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வழக்கு விசாரணைக்குத் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் நடைமுறையிலுள்ள சட்டப் பொறிமுறைக்கு அமைவாக முறையாகச் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனோஜன் சிவராசாவுக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கைத் தூதரகம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனத் தூதுவர் அமீர் அத்வாஜ் இதன்போது மீண்டும் உறுதியளித்துள்ளார்.
மேலும், எதிர்கால வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அனோஜன் சிவராசா, அவரது சட்டத்தரணிகள் மற்றும் இலங்கைத் தூதரகம் ஆகியவற்றுக்கு இடையில் நெருங்கிய ஒருங்கிணைப்பைப் பேணுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இச்செயல்முறையின்போது நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்ட நடைமுறைகளுக்கும் முழுமையான மதிப்பளிக்கப்படும் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.








