மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய ‘அர்னாப்’ (Arnab) சூறாவளி மேலும் வலுவடைந்து, மிகத் தீவிர புயலாக மாற்றமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (27) அதிகாலை 2.30 மணியளவில், வட அகலாங்கு 15.9° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4° க்கு அருகில், காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கிலோமீற்றர் வடகிழக்குத் திசையில் இப்புயல் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புயல் இன்று பிற்பகல் 5.30 மணி வரை மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் வடமேற்குத் திசையில் நகர்ந்து, நாளை (28) முற்பகல் 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேசக் கடற்கரை ஊடாக இந்தியக் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்தப் புயலின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், புயலை நோக்கி ஈர்க்கப்படும் காற்றோட்டம் நாட்டின் ஊடாகக் காணப்படுவதால், தென்மேற்குப் பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறித்த பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.







