முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஐந்து முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ள ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL), நீதிமன்ற உத்தரவுகளை முறையாகப் பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய மொத்தம் 275 மில்லியன் ரூபாவைச் செலுத்தத் தவறியமை தொடர்பிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று (26) நடைபெற்ற உயர் நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், மருத்துவக் கொள்வனவு வழக்கில் நீதிமன்றம் முன்னதாக வழங்கிய தீர்ப்பை வேண்டுமென்றே மீறியதாகக் குற்றஞ்சாட்டி, ஒக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்ததாக TISL தெரிவித்துள்ளது.
2026 மார்ச் 27ஆம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சட்டத்தின் சமமான பாதுகாப்பைப் பெறும் அடிப்படை உரிமையை ஐந்து பிரதிவாதிகளும் மீறியுள்ளதாக அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல 75 மில்லியன் ரூபாவை அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும் என்றும், ஏனைய நான்கு பிரதிவாதிகளும் தலா 50 மில்லியன் ரூபாவைச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
TISL தெரிவித்துள்ளதன்படி, முன்னாள் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) தலைவர் பேராசிரியர் எஸ். டி. ஜயரத்ன, நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒக்டோபர் 22ஆம் திகதி 50 மில்லியன் ரூபாவை முழுமையாகச் செலுத்தியதாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஒக்டோபர் 23ஆம் திகதி 20 மில்லியன் ரூபாவைச் செலுத்தியுள்ளதுடன், எஞ்சிய 55 மில்லியன் ரூபாவை இரண்டு வாரங்களுக்குள் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். ஜே. எஸ். சந்திரகுப்த, ஒரு வாரத்துக்குள் 5 மில்லியன் ரூபாவையும், எஞ்சிய 45 மில்லியன் ரூபாவை மூன்று மாதங்களுக்குள் செலுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.
முன்னாள் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் விஜித் குணசேகர, இரண்டு வாரங்களுக்குள் 20 மில்லியன் ரூபாவையும், எஞ்சிய 30 மில்லியன் ரூபாவை மூன்று மாதங்களுக்குள் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ஏ. துசித சுதர்ஷன, தனது சேமிப்பிலிருந்து சுமார் 2 மில்லியன் ரூபாவை ஒரு வாரத்துக்குள் செலுத்துவதுடன், எஞ்சிய 48 மில்லியன் ரூபாவை மூன்று மாதங்களுக்குள் செலுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.
நிலுவையிலுள்ள கொடுப்பனவுகளை மூன்று மாதங்களுக்குள் செலுத்துமாறு நான்கு பிரதிவாதிகளுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலா 50 மில்லியன் ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு ஆட்பிணையாளர்களின் உத்தரவாதத்திலும் அவர்களைப் பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றுவது சட்டத்தின் ஆட்சிக்கும் அரசியலமைப்பின் கீழான பொறுப்புக்கூறலுக்கும் அடிப்படையானது என TISL வலியுறுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு மனுதாரர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஊழல் நடவடிக்கைகள் நீண்டகால சட்ட விளைவுகளையும் நற்பெயருக்குப் பாதிப்பையும் ஏற்படுத்தும் என எச்சரித்துள்ள TISL, பொது அதிகாரிகளைக் கண்காணித்து அவர்களின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு 2027 பெப்ரவரி 15ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.







