சேர்பியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாணவர் தலைமையிலான அரசியல் இயக்கம் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், நீண்டகாலமாக அரசியல் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச் மற்றும் அவரது சேர்பிய முற்போக்குக் கட்சியின் (SNS) ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி சேர்பிய தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்ட ஆரம்ப கட்ட முடிவுகளின் படி, மாணவர் இயக்கத்தின் ஆதரவுடன் போட்டியிட்ட மாணவர் பட்டியல் 52.71 சதவீத வாக்குகளைப் பெற்று 250 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 140 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
வுசிச் தலைமையிலான கூட்டணி 39.17 சதவீத வாக்குகளைப் பெற்று 104 ஆசனங்களைப் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் மாணவர் இயக்கம் பெரும்பான்மை வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, வுசிச் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து அரசியல் வெற்றி வரை!
அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளுக்கு எதிராக சுமார் இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட மாணவர் தலைமையிலான போராட்டங்களின் தொடர்ச்சியாக இந்த வெற்றி அமைந்துள்ளது.
2024 நவம்பரில் நோவி சாட் நகரிலுள்ள ரயில் நிலையத்தின் கூரை அமைப்பு இடிந்து வீழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தப் போராட்டங்கள் ஆரம்பமாகின.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் அரசியல் மாற்றத்தைக் கோரியும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவர்கள் சேர்பியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
வெற்றியைக் கொண்டாடிய மக்கள்
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தலைநகர் பெல்கிரேட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி வெற்றியைக் கொண்டாடினர்.
தேசியக் கொடிகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாணவர் இயக்கத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த பெல்கிரேட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராடோமிர் சாய்சிச், இந்த வெற்றியை அறிவித்ததுடன், நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் இயக்கம் கவனம் செலுத்தும் எனத் தெரிவித்தார்.
ஊழல் ஒழிப்பும் ஜனநாயக மறுசீரமைப்பும் முக்கிய இலக்குகள்
போராட்டங்களிலிருந்து உருவான இந்த மாணவர் ஆதரவு அரசியல் இயக்கம், ஊழலை ஒழித்தல், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் கல்வித்துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டது.
இந்த இயக்கம் தனியொரு அரசியல் தலைவரை முன்னிறுத்துவதைத் தவிர்த்து வந்துள்ளதால், அடுத்த அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கப்போவது யார் என்பது தொடர்பில் இன்னும் கேள்விகள் நிலவுகின்றன.
இந்த இயக்கத்தின் வேட்பாளர் பட்டியலில் கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், நடிகர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இடம்பெற்றுள்ளனர். இது போராட்டங்களிலிருந்து உருவான பரந்த மக்கள் கூட்டணியைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
புதிய அரசாங்கத்தை அமைப்பதில் அடுத்தகட்ட நகர்வு!
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள மாணவர் இயக்கத்துக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனினும், இறுதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதும் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் நிறைவடைவதும் இன்னும் எஞ்சியுள்ளன.
பல்கலைக்கழகங்களில் ஆரம்பமான மாணவர் போராட்டம், தற்போது பால்கன் பிராந்திய நாடான சேர்பியாவின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்குச் சென்றுள்ளது.
இந்தத் தேர்தல் வெற்றி, சேர்பியாவின் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.







