அப்ரா அன்சார்
நெதன்யாகுவின் கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்படுமா? ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி.
இஸ்ரேலில் நடைபெறும் தேர்தலின் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (27) இரவு நிறைவடைந்ததும், வாக்குக்கணிப்பு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தேர்தலில் யார் வெற்றிபெற்றுள்ளனர் என்பது தொடர்பான இறுதியான தெளிவு கிடைப்பதற்குப் பல நாட்கள் செல்லலாம்.
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு தெற்கு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்துவரும் இனப்படுகொலைப் போர் ஆரம்பமாகி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்தத் தேர்தல், நாட்டின் எதிர்கால அரசியல் திசையைத் தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாகக் கருதப்படுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதுடன், கடந்த மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திய பல அண்டை நாடுகளுடனும் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
அதேவேளை, 2023 ஒக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பணயக்கைதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் கையாண்ட விதம், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தீவிர ஆர்த்தடாக்ஸ் யூதர்களின் இராணுவச் சேவை தொடர்பான சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளையும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்கொண்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்குக்கணிப்புகளின்படி, நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கும் முன்னாள் இஸ்ரேலிய இராணுவத் தலைமை அதிகாரி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இஸ்ரேலிய ஊடகமான ஹாரெட்ஸ், தொலைக்காட்சி அலைவரிசைகளின் வாக்குக்கணிப்புகளைத் தொகுத்து வெளியிட்ட தகவலின்படி, அலைவரிசைகள் 11, 12 மற்றும் 13 ஆகியவற்றின் சராசரி கணிப்புகள் நெதன்யாகுவின் கூட்டணி 50 ஆசனங்களையும், ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 54 ஆசனங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 ஆசனங்கள் உள்ளன. அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒரு கட்சி அல்லது கூட்டணி குறைந்தது 61 ஆசனங்களைப் பெற்றிருக்க வேண்டும்.
வாக்குப்பதிவு எப்போது நிறைவடையும்?

இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை (27) உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகி, இரவு 10 மணிக்கு நிறைவடையும்.
இந்தத் தேர்தலில் சுமார் 7.3 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 1.2 மில்லியன் பேர் இஸ்ரேலின் பாலஸ்தீனக் குடிமக்களாவர்.
வெளிநாடுகளில் வசிக்கும் இஸ்ரேலியர்களுக்கு பொதுவான தபால் மூல வாக்களிப்பு வசதி இல்லாததால், தேர்தல் தினத்தன்று நேரில் வாக்களிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
எனினும், இராஜதந்திரிகள் மற்றும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் இதற்கு விதிவிலக்காகக் கருதப்படுகின்றனர். அவர்கள் ஒக்டோபர் 20ஆம் திகதி இஸ்ரேலியத் தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகப் பணியகங்களில் வாக்களித்துள்ளனர்.
தேர்தல் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்?
செவ்வாய்க்கிழமை இரவு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், இஸ்ரேலிய தொலைக்காட்சி அலைவரிசைகள் வாக்குக்கணிப்பு முடிவுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த சில மணித்தியாலங்களுக்குள் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆரம்பகட்டத் தகவல்கள் வெளியாகலாம். எனினும், தெளிவான முடிவை உறுதிப்படுத்துவதற்குப் பல நாட்கள் அல்லது வாரங்கள்கூட செல்லலாம்.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், இஸ்ரேலின் மத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும்.
இறுதி வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமைக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தேர்தல் நடைபெற்ற ஒரு வாரத்திற்குப் பின்னர், அதாவது நவம்பர் 4ஆம் திகதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு கட்சியும் அல்லது கூட்டணியும் பெரும்பான்மையைப் பெறத் தவறினால், அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நீண்டகாலம் நீடிக்கலாம்.
இஸ்ரேலின் தேர்தல் முறை எவ்வாறு செயல்படுகிறது?

இஸ்ரேலில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. இதன்படி, வாக்காளர்கள் தனிப்பட்ட வேட்பாளர்களுக்குப் பதிலாக அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர்.
ஒரு கட்சி பெறும் வாக்குகளின் விகிதத்துக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் அதற்கான ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன.
உதாரணமாக, நெதன்யாகுவின் லிகுட் கட்சி நாடளாவிய ரீதியில் 50 சதவீத வாக்குகளைப் பெற்றால், 120 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் சுமார் 50 சதவீத ஆசனங்களைப் பெறும்.
நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு ஒரு கட்சி குறைந்தது 3.25 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
சுமார் 12 அரசியல் கட்சிகள் இந்தத் தேர்தலில் குறைந்தபட்ச வாக்கு வரம்பைத் தாண்டும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுவதால், இறுதி வாக்கு எண்ணிக்கையையும் ஆசனப் பகிர்வையும் உறுதிப்படுத்துவதற்குக் காலம் செல்லலாம்.
புதிய பிரதமர் எவ்வாறு தெரிவு செய்யப்படுவார்?
இறுதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்.
அதன் பின்னர், அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிக வாய்ப்புள்ளவர் எனக் கருதப்படும் ஒருவரை ஜனாதிபதி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நியமிப்பார்.
அவ்வாறு நியமிக்கப்படுபவருக்கு அரசாங்கத்தை அமைப்பதற்காக அதிகபட்சம் 42 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
இஸ்ரேலில் இதுவரை எந்தவொரு தனிக் கட்சியும் நாடாளுமன்றத்தில் முழுமையான பெரும்பான்மையைப் பெற்றதில்லை என்பதால், பொதுவாகப் பல கட்சிகள் இணைந்த கூட்டணி அரசாங்கங்களே அமைக்கப்படுகின்றன.
இதனால், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் பல வாரங்கள் நீடிப்பது வழக்கமாகும்.
நெதன்யாகுவால் அல்லது எதிர்க்கட்சிகளால் அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால் என்ன நடக்கும்?
எந்தவொரு தரப்பினாலும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், நெதன்யாகு தலைமையிலான தற்போதைய அரசாங்கம் காபந்து அரசாங்கமாகத் தொடர்ந்து செயற்படும்.
எனினும், அதற்கு முன்னதாக அதிக வாக்குகளைப் பெற்ற தரப்பினர் சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கலாம்.
இதற்காகப் பெரும்பான்மை இல்லாத சிறுபான்மை அரசாங்கத்தை அமைப்பது அல்லது மற்றொரு அரசியல் தலைவருடன் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வது உள்ளிட்ட மாற்று வழிகளும் பரிசீலிக்கப்படலாம்.
அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்து, எந்தவொரு தரப்பினாலும் செயற்படக்கூடிய அரசாங்கத்தை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகலாம்.
இஸ்ரேலின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தல், நெதன்யாகுவின் அரசியல் ஆதிக்கம் தொடருமா அல்லது எதிர்க்கட்சிகள் புதிய அரசாங்கத்தை அமைக்குமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.






