திரியா கேட் அபிவிருத்தி அதிகாரசபை (Diriyah Gate Development Authority – DGDA), சவுதி அரேபியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு இன்று (23) திரியா (Diriyah) பகுதியில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
இராணுவ அணிவகுப்புகள், வரலாற்று மற்றும் கலாசார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நாட்டின் வரலாறு, தேசிய பெருமை மற்றும் மக்களின் ஒற்றுமை ஆகியவை பிரதிபலிக்கப்படவுள்ளன.
உள்துறை அமைச்சுடன் (Ministry of Interior) இணைந்து ஏற்பாடு செய்யப்படும் இராணுவ அணிவகுப்பு, அல் இமாம் அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் பின் சவுத் வீதி (Al Imam Abdulaziz bin Muhammad ibn Saud Road) வழியாக வாடி ஹனீஃபாவை (Wadi Hanifah) நோக்கி இடம்பெறவுள்ளது.
இந்த அணிவகுப்பை பொதுமக்கள் மற்றும் வருகையாளர்கள் அணிவகுப்பு செல்லும் பாதையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பார்வையிட முடியும். குதிரைப்படை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதுடன், பாதுகாப்புப் பணியாளர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அணிவகுப்பு செல்லும் பாதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திரியாவின் நிறுவல் மற்றும் குடியேற்றத்துடன் நெருங்கிய தொடர்புடைய வாடி ஹனீஃபா (Wadi Hanifah) உள்ளிட்ட பல வரலாற்றுத் தளங்களை கடந்து அணிவகுப்பு செல்லவுள்ளது.
மேலும், முதல் சவுதி அரசின் தலைவர்களில் ஒருவரான இமாம் அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் பின் சவுத் பெயரிடப்பட்டுள்ள அல் இமாம் அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் பின் சவுத் வீதியும் (Al Imam Abdulaziz bin Muhammad ibn Saud Road) இந்த அணிவகுப்பு செல்லும் பாதையில் இடம்பெறுகிறது.
திரியா கேட் அபிவிருத்தி அதிகாரசபையின் (DGDA) தேசிய தினக் கொண்டாட்டங்கள், திரியாவின் வரலாற்று மற்றும் கலாசார பாரம்பரியத்தை பாதுகாத்து, அதனை மக்களிடையே மேலும் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியாக அமைந்துள்ளன.
வரலாற்றுப் பாரம்பரியத்தையும் தற்போதைய வளர்ச்சியையும் இணைக்கும் இந்த நிகழ்வுகள், சவுதியின் வரலாறு குறித்த பெருமையையும் தேசிய ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
(மூலம்: சவுதி செய்தி நிறுவனம் – Saudi Press Agency (SPA))







