முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின்போது, வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3,200 கிலோகிராமுக்கும் அதிகமான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 7ஆம் திகதி, கிழக்கு கடற்படை கட்டளையின் கீழுள்ள SLNS கோட்டாபய கடற்படையினரும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
புத்துமாத்தளன் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இயங்கி வந்த மீன் சேகரிப்பு நிலையமொன்றை அதிகாரிகள் சோதனையிட்டபோது, வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட மீன்களும் கைது செய்யப்பட்ட பெண்ணும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.









