பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரிடமிருந்து ரூ.51.37 மில்லியன் பெறுமதியான குஷ் கஞ்சா மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
திங்கட்கிழமை (07) வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்கொக்கில் இருந்து Thai Airways TG-307 விமானம் மூலம் இலங்கை வந்த இருவரும், அவர்களது பயணப் பொதிகள் சோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க அதிகாரிகளின் தகவலின்படி, 39 வயதுடைய சந்தேகநபரின் பயணப் பொதியில் இருந்து எட்டு பிளாஸ்டிக் போத்தல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.224 கிலோகிராம் குஷ் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சந்தை பெறுமதி சுமார் ரூ.22.24 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது சந்தேகநபரான 23 வயதுடையவரிடம், எட்டு பிளாஸ்டிக் போத்தல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.272 கிலோகிராம் குஷ் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் ரூ.22.72 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது பயணப் பொதியை சோதனையிட்டபோது அட்டைப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 641 கிராம் ஹஷீஷ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் ரூ.6.41 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மொத்தமாக 5.137 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் 4.496 கிலோகிராம் குஷ் கஞ்சாவும், 641 கிராம் ஹஷீஷும் அடங்குகின்றன.
ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.









