ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அனாதா (Anata) நகரம் மற்றும் அதனை அண்மித்த ஷுஃபாத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய படையினர் இன்று (08) செவ்வாய்க்கிழமை அதிகாலை சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக பாலஸ்தீன செய்தி நிறுவனமான வஃபா தெரிவித்துள்ளது.
இராணுவ வாகனங்கள் மற்றும் புல்டோசர்களுடன் வந்த இஸ்ரேலிய படையினர், அனாதா மற்றும் ஷுஃபாத் பகுதிகளுக்கான அனைத்து நுழைவாயில்களையும் மூடியுள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் உள்ளே செல்லவோ அல்லது வெளியேறவோ முடியாத நிலை ஏற்பட்டதுடன், ஒலிபெருக்கிகள் மூலம் ஊரடங்கு உத்தரவும் அறிவிக்கப்பட்டுள்ளது.சோதனை நடவடிக்கையின்போது பல வீடுகள் மற்றும் கடைகளில் படையினர் சோதனை நடத்தியதுடன், அனாதா பகுதியில் அமைந்திருந்த பிரதான நீர் குழாய்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும், குறைந்தது ஒரு பெண் உட்பட பல பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையை “திட்டமிட்ட இராணுவ ஆக்கிரமிப்பு” என ஜெருசலேம் ஆளுநரகம் வர்ணித்துள்ளது.
கடந்த மாதம் ஜெருசலேமின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கலந்தியா அகதிகள் முகாமில் மேற்கொள்ளப்பட்ட பாரிய சோதனை நடவடிக்கையுடன் தற்போதைய நடவடிக்கையையும் ஜெருசலேம் ஆளுநரகம் ஒப்பிட்டுள்ளது.









