2023ஆம் ஆண்டு முதல் லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 8,920 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30,595 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஒக்டோபர் முதல் 2026 செப்டெம்பர் வரையான காலப்பகுதிக்கான தரவுகளின்படி இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, கடந்த மார்ச் 2ஆம் திகதி முதல் மாத்திரம் 4,358 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12,359 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், மார்ச் 2ஆம் திகதி முதல் அம்புலன்ஸ் குழுவினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை இலக்காகக் கொண்டு 179 இஸ்ரேலிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் 135 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மார்ச் 2ஆம் திகதி இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருந்தது. அன்றைய தினம் வடக்கு இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லா மேற்கொண்ட ரொக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து பெய்ரூட் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக ஆகஸ்ட் மாதத்திலும் 3 இலட்சத்து 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்த நிலையில் இருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகமை (UNHCR) தெரிவித்துள்ளது. அவர்களில் குறைந்தது 22,000 பேர் கூட்டு தங்குமிடங்களில் வசித்து வந்தனர்.
இரு தரப்புக்கும் இடையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரண்டு “சமாதான” உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட போதிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு லெபனானின் Kfar Reman பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், 23 பேர் காயமடைந்தனர்.
மேலும், தெற்கு லெபனானின் பல பகுதிகளில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், Zawtar al-Sharqiyah பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








