வளைகுடாவில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் சனிக்கிழமை (05) மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை நோக்கி பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.
இதில் விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றும், வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் ஒன்றும் அடங்குகின்றன. எனினும், இரு கப்பல்களும் தாக்குதலைத் தவிர்த்ததாகவும், அமெரிக்கப் படையினர் எவரும் காயமடையவில்லை என்றும் CENTCOM தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகள் மூன்று ஈரானியக் கப்பல்களை இலக்கு வைத்துள்ளன. அவற்றில் இரண்டு கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதுடன், மூன்றாவது கப்பலின் பணியாளர்கள் கப்பலைக் கைவிட்ட பின்னர், அது முற்றிலும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்கக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், அவர்களின் எண்ணெய் டேங்கர்களை அழித்து மூழ்கடிப்போம்” என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், “அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதுடன், IRGC மீது பொருளாதாரச் செலவை ஏற்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சனிக்கிழமை இடம்பெற்ற மோதல் இரு நாடுகளுக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட பதிலடி நடவடிக்கையாக தொடருமா அல்லது புதியதொரு இராணுவ மோதல் சுழற்சிக்கு வழிவகுக்குமா என்பது கேள்வியாகியுள்ளது.







