தமிழில்; அப்ரா அன்சார்
மூலம்: அல் ஜசீரா

காஸா நகரில் நிலவும் தாங்க முடியாத வெப்பத்துக்கு மத்தியில், ஒரு குறுகிய தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கூடாரத்திற்குள் அமர்ந்திருக்கிறார் பல் மருத்துவர் ரிஸ்க் சுஃப்யான் அபு ஹலீமா.
அடுத்த நோயாளிக்காகக் காத்திருக்கும் அவருக்கு, இந்தக் கூடாரமே தற்போது கிளினிக்காக மாறியுள்ளது.
இஸ்ரேலின் போரினால் காஸா பகுதியில் பெருமளவான கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள குடியிருப்பு மற்றும் வர்த்தக இடங்களுக்கான வாடகையும் அதிகரித்துள்ளது. இதனால் மலிவு விலையில் அறுவை சிகிச்சை நிலையம் அல்லது கிளினிக் ஒன்றை நடத்துவதற்கான இடத்தைப் பெறுவது கடினமாகியுள்ளது.
“அதிகரித்து வரும் வெப்பநிலையே நான் எதிர்கொண்ட முதல் சவாலாக இருந்தது. காற்று உள்ளே செல்லும் வகையில் கூடாரத்தின் மூலைகளைச் சரிசெய்து, அதன் ஓரங்களை உயர்த்த வேண்டியிருந்தது,” என மருத்துவர் அபு ஹலீமா அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
வடக்கு காஸாவின் ஷேக் ஸயீத் நகரில் அமைந்திருந்த அவரது பழைய கிளினிக்கான ‘ஸ்மைல் ஒன்’, 2023ஆம் ஆண்டு போர் ஆரம்பித்த முதல் நாட்களிலேயே குண்டுவீச்சுக்கு இலக்கானது.
31 வயதான மருத்துவர் கடந்த ஆண்டு மே மாதம், காஸா நகரின் அல்-நஸ்ர் பகுதியில், தற்போது கூடாரம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் புதிய கிளினிக் ஒன்றை உருவாக்கினார்.
ஆனால் மூன்று மாதங்களுக்குப் பின்னர், இஸ்ரேலியப் படைகள் அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தியபோது அந்தக் கிளினிக்கும் அழிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒக்டோபரில் இடம்பெற்ற போர்நிறுத்தத்திற்கு சில வாரங்களுக்கு முன்னரே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
தற்போது, தனது முன்னாள் கிளினிக்கின் இடிபாடுகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திலேயே பல் சிகிச்சைகள் மற்றும் அவசர பல் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.
மின்சார விநியோகம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால், மின்சாரம் மீண்டும் வரும் வரை கூடாரத்திற்குள் அமர்ந்து காத்திருப்பதைத் தவிர அவரால் வேறு எதுவும் செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது.
வேறு ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுப்பதே வெளிப்படையான தீர்வாகத் தோன்றலாம். ஆனால் காஸாவில் தற்போது குடியிருப்பு மற்றும் வர்த்தக இடங்களுக்கே கடும் பற்றாக்குறை நிலவுகிறது. எஞ்சியுள்ள சில இடங்களின் வாடகையும் பெரும்பாலானோரால் செலுத்த முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயற்கைக்கோள் மையமான யுனோசாட் (UNOSAT) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, காஸா நகரிலும் வடக்கு காஸாவிலும் உள்ள ஐந்து கட்டடங்களில் நான்குக்கும் மேற்பட்டவை இஸ்ரேலின் போரினால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன அல்லது கடுமையாக சேதமடைந்துள்ளன.
காஸாவில் உள்ள ஐந்து கட்டடங்களில் ஒன்றுக்கும் குறைவானவையே தற்போது பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன. மேலும், கட்டுமானப் பொருட்களை இஸ்ரேல் தடை செய்துள்ளதால் சேதமடைந்த கட்டடங்களைப் பழுதுபார்ப்பதும் சாத்தியமற்றதாகியுள்ளது.
இதன் விளைவாக, அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்கான இடங்களின் பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றின் வாடகை விலைகள் அதிகரித்துள்ளன.
“போருக்கு முன்னர், எனது கிளினிக்கிற்காக ஒரு முழு அடுக்குமாடி குடியிருப்பையே மாதம் 500 ஷெக்கெல்களுக்கு ($166) வாடகைக்கு எடுத்திருந்தேன். ஆனால் இன்று எஞ்சியுள்ள குடியிருப்புகளின் விலையை என்னால் செலுத்தவே முடியாது,” என அவர் கூறினார்.
தற்போது, அதற்கான செலவு சுமார் 1,000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிக வாடகையைவிட வெப்பமே மேல்!
மருத்துவர் அபு ஹலீமாவால் கண்டுபிடிக்க முடிந்த மிகக் குறைந்த செலவிலான மாற்று வழி இந்தக் கூடாரம்தான்.
போரினால் ஏற்கனவே தனிப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியில் பெரும் துயரங்களை எதிர்கொண்டுள்ள நோயாளிகளிடம், கட்டட வாடகைக்கான அதிக செலவை சிகிச்சைக் கட்டணமாக சுமத்த அவர் விரும்பவில்லை.
“கூடாரத்திற்குப் பதிலாக எனது கிளினிக்கிற்காக ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருந்தால், ஒரு பல் நிரப்புதலுக்கான கட்டணம் நோயாளிக்கு இரட்டிப்பாகியிருக்கும்,” என மருத்துவர் அபு ஹலீமா கூறுகிறார்.
“கடுமையான கோடை வெப்பத்தை இங்கே தாங்கிக்கொள்வதன் மூலம், அதிக வாடகை காரணமாக நோயாளிகளிடம் வசூலிக்க வேண்டிய அதிக கட்டணத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறேன். அதுமட்டுமல்ல, எனக்கு வேறு எந்தத் தேர்வும் இல்லை.”
மருத்துவர் தனது மருத்துவ உபகரணங்களை மிகுந்த கவனத்துடன் பராமரித்து வருகிறார். தூசி மற்றும் கிருமிகளிலிருந்து அவற்றைப் பாதுகாப்பதற்காக அவற்றைத் தொடர்ந்து கிருமிநீக்கம் செய்கிறார்.
கூடாரத்தின் மெல்லிய துணிச் சுவர்கள் திருடர்களிடமிருந்து போதிய பாதுகாப்பை வழங்காததால், பாதுகாப்புப் பணியாளர் ஒருவரையும் பணியமர்த்தியுள்ளார்.
எனினும், அவரது அனைத்து முயற்சிகளையும் மீறி, காஸாவின் சிதைந்த பொருளாதாரமும் வளங்களின் பற்றாக்குறையும் காரணமாக பல் சிகிச்சை என்பது பலருக்கு ஆடம்பரமாக மாறியுள்ளது.
25 வயதான யூசுப் அபு ஹலீமா என்ற நோயாளி அங்குள்ள நிலைமையை சில எளிய வார்த்தைகளில் சுருக்கமாகக் கூறுகிறார்:
“கூடாரத்திற்குள் நிலவும் கடுமையான வெப்பத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் இயங்கும் கிளினிக்குகளில் பல் நிரப்புதலுக்காக வசூலிக்கப்படும் அதிக கட்டணத்தை என்னால் நிச்சயமாகச் செலுத்த முடியாது.”
வலியிலும் வறுமையிலும் எடுக்கப்படும் முடிவுகள்!
23 வயதான ஹெபா ரிஹான், அல்-அக்ஸா பல்கலைக்கழகத்தில் பொது தாதியர் பிரிவில் பட்டம் பெற்ற பின்னர், தனது துறையில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு பெரும் சிரமத்தை எதிர்கொண்டார்.
இதனால், காஸா பகுதியின் தெற்கிலிருந்து மேற்குப் பகுதிக்கு தினமும் நீண்ட தூரம் நடந்துசென்று வேலை தேடினார்.
இறுதியில், கடந்த மே மாதம் மருத்துவர் அபு ஹலீமாவின் கிளினிக்கைக் கண்டுபிடித்து அங்கு பணியாற்றத் தொடங்கினார்.
தற்போது அவரது பணியின் முக்கியமான ஒரு பகுதியாக, சிகிச்சைக்கான கட்டணம் ஏன் அதிகமாக உள்ளது என்பதை நோயாளிகளுக்கு விளக்குவது மாறியுள்ளது.
சிகிச்சைக்குத் தேவையான பொருட்களின் பற்றாக்குறை, போர் மற்றும் காஸா மீதான முற்றுகையால் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளே அதிக கட்டணத்திற்குக் காரணம் என்பதை அவர் நோயாளிகளிடம் விளக்குகிறார்.
“ஒரு நாள் ஒருவர் கடுமையான பல் வலியுடன் இங்கு வந்தார். பல் நிரப்புதலுக்கான கட்டணம் எவ்வளவு என அவர் கேட்டபோது, அது 350 ஷெக்கெல்கள் ($116) எனக் கூறப்பட்டது. ஆனால் அவரிடம் அந்தப் பணம் இல்லை,” என ஹெபா ரிஹான் தெரிவித்தார்.
“அதன்பின்னர் பல்லைப் பிடுங்குவதற்கு எவ்வளவு செலவாகும் என அவர் நேரடியாகக் கேட்டார். அதற்கான கட்டணம் 50 ஷெக்கெல்கள் ($17) மட்டுமே.”
“வலியையும் அந்தச் செலவையும் தாங்கிக்கொள்ள முடியாததால், தனது இயற்கையான பல்லையே பிடுங்கிக்கொள்ள அவர் முடிவு செய்தார்.”
“நான் இங்கு சந்தித்தவற்றில் அதுதான் எனக்கு மிகவும் வேதனையான தருணமாக இருந்தது,” என அவர் கூறினார்.










