நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் DNA பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Langtang Lirung மலைச் சிகரத்திற்கு அருகில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து, பாறைகள், சேறு மற்றும் பெருமளவான நீர் பள்ளத்தாக்குகளை நோக்கி பாய்ந்ததில் பாரிய அழிவுகள் ஏற்பட்டன.
இந்த அனர்த்தத்தில் இதுவரை 1,270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 4,700க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பலரின் உடல்கள் பல நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை சிதைவடைந்த நிலையில் காணப்படுவதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நேபாள அதிகாரிகள் காணாமல் போனவர்களின் முதல்நிலை உறவினர்களான தந்தை, தாய், மகன் அல்லது மகள்களிடம் இருந்து இரத்த மாதிரிகளைப் பெற்று DNA சுயவிவரங்களை உருவாக்கி வருகின்றனர்.
வெளிநாடுகளைச் சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்களும் தங்களது சொந்த நாடுகளில் DNA பரிசோதனை மேற்கொண்டு, அதன் முடிவுகளை நேபாள பொலிஸாருக்கு அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நூற்றுக்கணக்கான உறவினர்களிடமிருந்து DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை நேபாள பொலிஸ் தடயவியல் அறிவியல் ஆய்வகம் மற்றும் நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
பொதுவாக பேரிடர்களில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண DNA, கைரேகைகள் மற்றும் பற்களின் பதிவுகள் ஆகியவை முக்கிய ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. உடல்கள் நீண்ட நேரம் நீரில் மூழ்கியிருந்தால் அல்லது கடுமையாக சேதமடைந்திருந்தால், முகத்தை வைத்து அடையாளம் காண்பது சாத்தியமற்றதாகிவிடும்.
இந்நிலையில், எலும்புகள் மற்றும் பற்கள் போன்றவற்றிலிருந்தும் DNA பெற முடியும் என்பதால், DNA பரிசோதனை முக்கியத்துவம் பெறுகிறது.
காணாமல் போன நபரின் நேரடி DNA மாதிரி கிடைக்காவிட்டால், அவருடைய நெருங்கிய உறவினர்களின் DNA மாதிரிகளுடன் மீட்கப்பட்ட உடல்களின் DNA சுயவிவரங்கள் ஒப்பிடப்பட்டு அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கிடையில், DNA அடையாளம் காணும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக இந்தியா 19 பேர் கொண்ட தடயவியல் நிபுணர் குழுவை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளது. இந்தக் குழு நேபாள நிபுணர்களுடன் இணைந்து DNA மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறது.
மேலும், சீனாவும் DNA அடையாளம் காணும் நிபுணர்களைக் கொண்ட இரண்டாவது குழுவை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









