காஸா நகரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்ட குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து 55 பாலஸ்தீனர்களின் உடல்கள் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளன.காஸா சிவில் பாதுகாப்புப் பிரிவின் தகவலின்படி, சனிக்கிழமையன்று (05) இந்த மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மீட்கப்பட்ட அனைவரும் மல்கா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவின் ஸெய்தூன் (Zeitoun) பகுதியில் அமைந்திருந்த அவர்களது குடும்ப வீட்டில், 2023 நவம்பர் 19ஆம் திகதி இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியிருந்தன.
இஸ்ரேலிய தாக்குதல்களால் தங்களது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்திருந்த குடும்ப உறுப்பினர்கள், குறித்த வீட்டிற்குள் தஞ்சமடைந்திருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாலஸ்தீன செய்தி நிறுவனமான வஃபா தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்ட கர்னல் முஹம்மத் அபு டான், கடந்த 72 மணிநேரமாக மல்கா குடும்பத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
காஸாவில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள உயிரிழந்தவர்களை மீட்கும் பணிகள் பெருமளவில் கைகளால் முன்னெடுக்கப்படுகின்றன. கட்டிட இடிபாடுகளை அகற்றுவதற்குத் தேவையான கனரக இயந்திரங்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதால் மீட்புப் பணிகள் தாமதமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயற்கைக்கோள் நிலையத்தின் தரவுகளின்படி, போரின் போது காஸாவில் உள்ள 82 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன.மேலும், காஸா சுகாதார அமைச்சு, ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் உதவி அமைப்புகளின் மதிப்பீட்டின்படி, 10,000 முதல் 14,000 பேர் வரை காஸா முழுவதும் இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போயிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள அதிக எண்ணிக்கையிலானவர்களை மீட்பதற்கு தேவையான உபகரணங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் வழங்க வேண்டும் என அபு டான் கோரிக்கை விடுத்துள்ளார்.பெரும்பாலான உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் வார இறுதியில் அவர்களுக்கான கூட்டு இறுதி ஊர்வலம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் திட்டம் இல்லை – அமெரிக்கா!
இதனிடையே, காஸா மக்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றும் திட்டம் இஸ்ரேலிடம் இல்லை என இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் மைக் ஹக்கபீ தெரிவித்துள்ளார்.
காஸா மக்களை பெருமளவில் வெளியேற்றுவது தொடர்பாக இஸ்ரேலின் இரு அமைச்சர்கள் அண்மையில் கருத்துகளை வெளியிட்டிருந்த நிலையில், அமெரிக்க தூதுவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், காஸாவுக்கு இறுதியில் “குடியேற்றம் இல்லாமல் உண்மையான தீர்வு இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர், காஸா மக்களை “தன்னார்வ குடியேற்றம்” என்ற பெயரில் வெளியேற்றுவதற்கான ஏழு வருடத் திட்டம் ஒன்றையும் முன்வைத்திருந்தார்.மறுபுறம், கடந்த 48 மணிநேரத்தில் காஸா மருத்துவமனைகளுக்கு 17 உடல்கள் மற்றும் 27 காயமடைந்தவர்கள் கொண்டு வரப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் ஐந்து புதிய உயிரிழப்புகள், முன்னர் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்த ஒருவர் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட 11 உடல்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பலர் இடிபாடுகளுக்கு அடியிலும் வீதிகளிலும் சிக்கியுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்களால் அவர்களைச் சென்றடைய முடியாத நிலை தொடர்வதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது மூன்று பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.கடந்த ஆண்டு ஒக்டோபரில் அமுலுக்கு வந்த “போர்நிறுத்தம்” முதல் இதுவரை குறைந்தது 1,344 பேர் உயிரிழந்தும் 4,464 பேர் காயமடைந்தும் உள்ளதாக காஸா சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதே காலப்பகுதியில் இடிபாடுகளில் இருந்து குறைந்தது 815 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.2023 ஒக்டோபர் முதல் காஸாவில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 73,470 ஆக உயர்ந்துள்ளதுடன், குறைந்தது 174,540 பேர் காயமடைந்துள்ளனர் என சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.









