கனடாவில் ஏற்கனவே தற்காலிக குடியிருப்பு அனுமதியுடன் வசித்து வரும் தகுதியுடைய 2 இலட்சம் பேருக்கு 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிரந்தர வதிவிட அனுமதி (Permanent Residency – PR) வழங்குவதற்கான புதிய குடியேற்றத் திட்டத்தை கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், குடியேற்ற விண்ணப்பங்கள் மீதான நிலுவையைக் குறைத்து, ஏற்கனவே கனடாவில் வாழ்ந்து வரும் திறமையான தொழிலாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
கனடாவின் 2026ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் மற்றும் 2027–2029ஆம் ஆண்டுகளுக்கான குடியேற்றத் திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் (IRCC) தகவலின்படி, இந்தத் திட்டம் இரண்டு பிரதான பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தொழிலாளர்களுக்கு 1 இலட்சம் இடங்கள்
இதன்படி, கனடாவில் ஏற்கனவே வசித்து வரும் தகுதியுடைய 1 இலட்சம் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நிரந்தர வதிவிட அனுமதி பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களின் தொழிலாளர் தேவைகளுக்கு பங்களிக்கக்கூடிய தகுதியுடையவர்களை அடையாளம் காண்பதற்காக மாகாண மற்றும் பிராந்திய அரசாங்கங்களுடன் இணைந்து கனேடிய மத்திய அரசாங்கம் செயற்படவுள்ளது.
இதில் மாகாண நியமனத் திட்டத்தின் (Provincial Nominee Program) கீழ் தகுதி பெறுபவர்களும் உள்ளடக்கப்படுவர்.
அத்துடன், அட்லாண்டிக் குடியேற்றத் திட்டம் (Atlantic Immigration Program), ஸ்டார்ட்அப் விசா திட்டம் (Start-up Visa Program), விவசாய மற்றும் உணவுத் துறை முன்னோடித் திட்டம் (Agri-Food Pilot) மற்றும் வீட்டு பராமரிப்புப் பணியாளர் குடியேற்ற வழித்தடங்கள் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள சிலரும் இவ்வாய்ப்பைப் பெறக்கூடும்.
மனிதாபிமான மற்றும் குடும்பப் பிரிவுகளுக்கு 1 இலட்சம் இடங்கள்
மீதமுள்ள 1 இலட்சம் இடங்கள் மனிதாபிமான அடிப்படையிலான விண்ணப்பதாரர்கள் மற்றும் குடும்ப மறு இணைப்பு தொடர்பான விண்ணப்பங்களுக்காக ஒதுக்கப்படவுள்ளன.
இதில் பல ஆண்டுகளாக நிரந்தர வதிவிட அனுமதிக்கான தீர்மானத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள், மனிதாபிமான மற்றும் கருணை அடிப்படையிலான விண்ணப்பதாரர்கள், உக்ரைன் மற்றும் ஹொங்கொங் தொடர்பான சில குடியேற்றத் திட்டங்களின் கீழ் தகுதி பெறுபவர்கள் உள்ளிட்டோர் உள்ளடங்குகின்றனர்.
ஏற்கனவே கனடாவின் சமூகங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளவர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்வதுடன், தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளித்து குடியேற்ற விண்ணப்பங்களின் நிலுவையைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 2027 முதல் 2029ஆம் ஆண்டு வரையான ஒவ்வொரு ஆண்டுக்கும் 3 இலட்சத்து 80 ஆயிரம் நிரந்தர குடியிருப்பாளர்களையும், 3 இலட்சத்து 70 ஆயிரம் புதிய தற்காலிக குடியிருப்பாளர்களையும் அனுமதிப்பதற்கான இலக்கை கனடா நிர்ணயித்துள்ளது.
புதிய நிரந்தர வதிவிடத் திட்டத்துக்கான அனுமதிகள் வழக்கமான வருடாந்த குடியேற்ற இலக்குகளுக்கு மேலதிகமாக வழங்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும், கனடாவில் தற்காலிக குடியிருப்பு அனுமதியுடன் வசிக்கும் அனைவருக்கும் தானாகவே நிரந்தர வதிவிட அனுமதி கிடைக்கும் என இந்த அறிவிப்பு அர்த்தப்படுத்தவில்லை.
விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய குடியேற்றத் திட்டங்களின் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுடன், இத்திட்டம் பிரதானமாக ஏற்கனவே கனடாவில் வசிப்பவர்களையே இலக்காகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நான்கு ஆண்டுகளில் 302.3 மில்லியன் கனேடிய டொலர்களை (C$302.3 million) ஒதுக்குவதற்கும் கனேடிய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.







