பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா, நாட்டின் முக்கிய டிஜிட்டல் வங்கியொன்றின் வீழ்ச்சியால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
குறித்த வங்கியின் வீழ்ச்சியால் சுமார் மூன்று மில்லியன் வாடிக்கையாளர்கள் தமது பணத்தை அணுக முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் அழுத்தங்கள் அதிகரித்தன.
பதவி விலகல் தொடர்பான தனது முடிவை காணொளி உரையொன்றின் மூலம் அறிவித்த சாண்டியாகோ பென்யா, தேசிய ஸ்திரத்தன்மை, சமூக அமைதி மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பதவி விலகத் தீர்மானித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பராகுவேயின் வேகமாக வளர்ந்து வந்த டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான Ueno வங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததுடன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முயற்சித்தனர்.
குறைந்தபட்ச கடன்தீர்க்கும் திறன் தொடர்பான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதாகத் தீர்மானித்த பராகுவே மத்திய வங்கி, Ueno வங்கியின் நிர்வாகத்தைக் கையகப்படுத்தியது.
சுமார் மூன்று மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த குறித்த வங்கி, சுமார் 850 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரச நிதிகளையும் நிர்வகித்து வந்துள்ளது.
இதனால் அரசாங்க வைப்புகள் மற்றும் ஓய்வூதிய நிதிகளின் பாதுகாப்பு தொடர்பில் கவலைகள் எழுந்தன.
வங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதுடன், வாடிக்கையாளர்கள் தமது சேமிப்புகளை மீளப்பெறுவதற்கான அனுமதியைக் கோரினர். அதேவேளை, போராட்டக்காரர்கள் ஜனாதிபதியின் பதவி விலகலையும் வலியுறுத்தினர்.
வங்கியின் முன்னாள் உரிமையாளருடன் தனக்கு இருந்த வர்த்தகத் தொடர்புகள் காரணமாக, ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா நலன் முரண்பாடு குறித்த குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டார். எனினும், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
வங்கியின் வீழ்ச்சி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வங்கியுடன் தொடர்புடைய எட்டு நிர்வாகிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஆளும் பழமைவாத கொலராடோ கட்சியின் உறுப்பினர்களிடமிருந்தும் ஜனாதிபதிக்கான ஆதரவு குறைந்தமை, அவரது நிர்வாகத்தின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், துணை ஜனாதிபதி பெட்ரோ அலியானா, 2028ஆம் ஆண்டு வரை நீடிக்கும் ஜனாதிபதி பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்காக சாண்டியாகோ பென்யாவுக்குப் பதிலாகப் பதவியேற்கவுள்ளார்.








