இன்று (07) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணித்தியால காலப்பகுதியில் கொழும்பின் திம்பிரிகஸ்யாய பகுதியில் 146.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மட்டக்குளி பகுதியில் 125.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், போபகம பகுதியில் 117.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளில் பெய்த கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், போக்குவரத்து மற்றும் மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, நகரின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை மாலை சில மணித்தியாலங்களுக்குள் கொழும்பில் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தொடர்ச்சியான மழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்








