கொழும்பு நகரில் வெள்ளப் பாதிப்புகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கல்லி பல்தசார் (Vraie Cally Balthazaar) மற்றும் முக்கிய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.
வெள்ளிக்கிழமை மாலை பெய்த கடும் மழையால் கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து, அதற்கான உடனடித் தீர்வுகளை அடையாளம் காணும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், கொழும்பு நகரின் கால்வாய் வலையமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் வீதிக் கட்டமைப்புகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு நகரின் வடிகால் கட்டமைப்பானது சுமார் 30 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை மாத்திரமே தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மேயர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
எனினும், கடந்த வெள்ளிக்கிழமை சில மணித்தியாலங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானதால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








