இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர், இலங்கை சுற்றுலா வழிகாட்டியைப் படகிலிருந்து கடலுக்குள் தள்ளும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஊடகமான RT வெளியிட்டுள்ள குறித்த காணொளியில், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று படகில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, தண்ணீர் அருந்திக்கொண்டிருந்த ஆண் சுற்றுலா வழிகாட்டியை ஒருவர் கடலுக்குள் தள்ளுவது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருவதுடன், உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியிடம் சுற்றுலாப் பயணிகள் நடந்துகொண்ட விதம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்ட இஸ்ரேலிய ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான டேனியல் அம்ராம் (Daniel Amram), சம்பந்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் விளக்கத்தையும் பகிர்ந்துள்ளார்.
குறித்த சம்பவம் ஒரு நகைச்சுவைக்காகவே இடம்பெற்றதாகவும், சுற்றுலா வழிகாட்டியும் அதில் பங்கேற்றிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுற்றுலா வழிகாட்டியை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இருக்கவில்லை என்றும், அவர் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“அது ஒரு நகைச்சுவை. அந்த ஊழியர் நலமாக இருக்கிறார். அவரைத் துன்புறுத்தும் நோக்கம் இருக்கவில்லை” என அவர்கள் தெரிவித்ததாக டேனியல் அம்ராம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காணொளி பரவியதைத் தொடர்ந்து தங்களுக்கு எதிராக வெளியிடப்படும் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
“இன்னும் ஒரு மாதத்தில் நாங்கள் இராணுவத்தில் இணைகிறோம். நாங்கள் நல்ல பிள்ளைகள். இத்தகைய வெறுப்புக்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல” எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சுற்றுலா வழிகாட்டியை கடலுக்குள் தள்ளிய சம்பவம் தொடர்பிலும், அதற்கு சுற்றுலாப் பயணிகள் வழங்கியுள்ள விளக்கம் தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.








