தொழில்முறை தவறுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்படும் கால்நடை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் கால்நடை மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை வலுப்படுத்தும் புதிய ஒழுங்குவிதிகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, இலங்கை கால்நடை மருத்துவச் சபைக்கு தொழில்முறை பதிவைத் தற்காலிகமாக இடைநிறுத்துதல், பதிவை இரத்துச் செய்தல் மற்றும் எச்சரிக்கை விடுத்தல் உள்ளிட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
மேலும், தொழில்முறை தவறான நடத்தை, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் கால்நடை மருத்துவத் தொழிலில் ‘இழிவான நடத்தை’ எனக் கருதப்படும் ஏனைய செயல்கள் மற்றும் தவறுகள் தொடர்பிலும் இந்த ஒழுங்குவிதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கால்நடை மருத்துவத் துறையைச் சேர்ந்த நிபுணர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக விசாரணைக் குழுக்களை நியமிக்கும் நடைமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1956 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கால்நடை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் கால்நடை மருத்துவப் பயிற்சியாளர்கள் சட்டத்தின் கீழ் இந்த ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கால்நடை மருத்துவ நிபுணர்களைப் பதிவு செய்தல், அவர்களின் தகைமைகளைத் தீர்மானித்தல் மற்றும் இலங்கையில் கால்நடை மருத்துவத் தொழிலை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கான சட்டக் கட்டமைப்பை இந்தச் சட்டம் வழங்குகின்றது.
2025 ஆம் ஆண்டின் இலக்கம் 1 கொண்ட கால்நடை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் கால்நடை மருத்துவப் பயிற்சியாளர்களின் இழிவான நடத்தை தொடர்பான ஒழுங்குவிதிகள், 2026 ஜனவரி 5ஆம் திகதியிடப்பட்ட 2470/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டன.
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைய, குறித்த ஒழுங்குவிதிகளை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.







