பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) சுகயீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல சந்தர்ப்பங்களில் தமது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்தார்.
இதற்கமைய, இன்றைய தினம் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகப் பல அரச நிறுவனங்களின் உள்வாரிப் பணிகள் பாதிக்கப்படக்கூடும் என அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அநுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள், கணக்குப் பிரிவுகள், காணிப் பிரிவுகள், ஆட்களைப் பதிவு செய்யும் அலுவலகங்கள் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் உள்வாரிப் பணிகளில் பெரும்பாலானவற்றை அபிவிருத்தி உத்தியோகத்தர்களே மேற்கொள்கின்றனர்.
எனவே, அவர்கள் பணிக்கு சமூகமளிக்காததால் குறித்த நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும், மத்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்களும் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, 12 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொறுப்பான அமைச்சர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அரச நிர்வாக அமைச்சர் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சருடனும் இது தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தாவிட்டால், எதிர்காலத்தில் இதைவிடத் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.








