இலங்கையில் சுற்றுச்சூழல் பத்திரிகைத்துறையை வலுப்படுத்தும் நோக்கில், Expertise France மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து, Canal France International (CFI) மற்றும் இலங்கை பத்திரிகை நிறுவனம் (SLPI) ஆகியவற்றுடன் இணைந்து புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் “பசுமை மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான ஊடகத் திறன் மேம்பாட்டு வேலைத்திட்டம்” (Media Capacity Building Programme for the Promotion of the Green Transition), காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விடயங்களை ஆழமாகவும் துல்லியமாகவும் செய்தியாக்குவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் கருவிகளை ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கையின் சுற்றுச்சூழல் பத்திரிகைத்துறையில் பாரம்பரியமாக இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், காலநிலை நிதி, பசுமை முதலீடுகள், நிலையான அபிவிருத்தி, உயிரியல் பல்வகைமை, பசுமை மாற்றத்துடன் தொடர்புடைய கொள்கைகள் மற்றும் பொருளாதார விடயங்கள் உள்ளிட்ட பரந்துபட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளை செய்தியாக்குவதற்கான வாய்ப்பை இந்த வேலைத்திட்டம் வழங்குகிறது.
இதன் மூலம் ஊடகவியலாளர்களின் தொழில்நுட்ப மற்றும் புலனாய்வு திறன்கள் மேம்படுத்தப்பட்டு, சிக்கலான காலநிலை நிதி விவகாரங்களை ஆய்வு செய்தல், அரச கொள்கைகளை ஆராய்தல் மற்றும் பசுமை முதலீடுகளின் போக்கு மற்றும் அதன் தாக்கங்களைப் பின்தொடர்தல் போன்றவற்றில் அவர்கள் பயிற்றுவிக்கப்படவுள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரை, ‘பசுமை மாற்றம்’ என்பது வெறுமனே ஒரு கருத்தாக்கம் அல்ல. அது அவசரமாகத் தேவைப்படும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய பாதையாகும். எனினும், இந்த மாற்றம் வெற்றியடைய பொதுமக்கள் போதிய தகவல்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், நிறுவனங்களும் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும்.
தொழில்நுட்ப ரீதியாக சிக்கலான நிதி மற்றும் நிர்வாக விடயங்களை பொதுமக்களுக்கு இலகுவாகப் புரியும் வகையிலான செய்திகளாக மாற்றுவதற்கான திறனை ஊடகவியலாளர்களுக்கு வழங்குவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பசுமைக் கொள்கைகள் தமது வாழ்வாதாரம், எரிசக்தி விலைகள் மற்றும் சமூகங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களை பொதுமக்கள் புரிந்துகொள்ள முடியும்.
மேலும், ‘நியாயமான மாற்றம்’ (Just Transition) மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், பெண்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் குரல்கள் மற்றும் பார்வைகள் தேசிய சுற்றுச்சூழல் விவாதங்களில் இடம்பெறுவதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. Expertise France (EF), Canal France International (CFI), இலங்கை பத்திரிகை நிறுவனம் (SLPI) மற்றும் பிரதான நிறுவனப் பயனாளராக வெகுஜன ஊடக அமைச்சு ஆகியவற்றின் பங்களிப்புடன் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வழக்கமான வகுப்பறை அடிப்படையிலான பயிற்சிகளுக்கு அப்பால், பின்வரும் முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன:
- மும்மொழி அடிப்படைப் பயிற்சி: சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களைச் சேர்ந்த 60 ஊடகவியலாளர்களுக்கு தீவிர பயிற்சி வழங்கப்படவுள்ளது.
- வழிகாட்டுதலுடனான ‘Story Labs’: ஆறு தீவிர Story Labs மூலம் ஊடகவியலாளர்களுக்கு நேரடி ஆசிரியர் வழிகாட்டுதல் வழங்கப்பட்டு, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட உயர்தர பசுமை மாற்றச் செய்திகளை ஆய்வு செய்து வெளியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
- இளைஞர் பங்கேற்பு: பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்களை ஈடுபடுத்தி, பசுமை மாற்றம் மற்றும் பொதுக் கொள்கைகள் தொடர்பான செய்திகளை உருவாக்க ஊக்குவிக்கப்படும்.
- கற்றல் மற்றும் பகிர்வு வலையமைப்பு நிகழ்வு: ஊடகவியலாளர்கள், நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட செய்திகளைப் பகிர்ந்து, எதிர்கால செய்திகளுக்கான புதிய யோசனைகள் குறித்து கலந்துரையாடப்படும்.
இலங்கை நிலையான பொருளாதார மீட்சியை நோக்கி முன்னேறும் நிலையில், தகவலறிந்த பொதுமக்கள் கலந்துரையாடலுக்கான முக்கிய ஊக்கியாக இலங்கை ஊடகத்துறையின் பங்கை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் இறுதி நோக்கம் என கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் ஊடகவியலாளர்கள், SLPI-யின் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் தொடர்புடைய ஊடக வலையமைப்புகள் மூலம் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ விண்ணப்ப அழைப்பின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.








